பட்டு கூடுக்கு உரிய விலை நிர்ணயிக்க மறுத்ததால் விவசாயிகள் திடீர் போராட்டம்
வாணியம்பாடியில் பட்டு கூடுக்கு உரிய விலை நிர்ணயிக்க அதிகாரிகள் மறுத்ததால் விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் பட்டு கூடுக்கு உரிய விலை நிர்ணயிக்க அதிகாரிகள் மறுத்ததால் விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விலை நிர்ணயம்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது.
இங்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் வளர்க்கப்பட்டு கொண்டு வரும் பட்டு கூடுகளை நிர்ணயிக்கப்படும் விலைக்கு விற்று வந்தனர்.
வாணியம்பாடி அலுவலகத்தில் விவசாயிகள் கொண்டுவரும் பட்டு கூடுகளை உரிய விலைக்கு எடுக்காமல் மற்ற மாவட்டங்களில் நிர்ணயிக்கப்படும் விலையை விட குறைவான விலைக்கு எடுப்பதாக விவசாயிகள் அளித்த புகாரின் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து வந்த அதிகாரிகள் விலை நிர்ணயம் குறித்து விசாரணை செய்தனர்.
விவசாயிகள் போராட்டம்
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இன்று பட்டு கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் உரிய விலையை அதிகாரிகள் நிர்ணயிக்க மறுத்ததால் அலுவலக வாயிலில் பட்டுக்கூடுகளை வைத்து விவசாயிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் 400 விவசாயிகள் உள்ளனர். ஆனால் 10 விவசாயிகள் மட்டுமே பட்டு கூடுகளை கொண்டு வந்து இங்கு போடுகிறோம்.
ஆனால் அந்த 10 விவசாயிகளுக்கு கூட உரிய பணம் தர அவகாசம் கேட்கிறார்கள். ஆனால் பிற மாநிலத்திற்கு சென்று பட்டு கூடுகள் கொடுத்தால் உடனடியாக ஆன்லைனில் பணம் செலுத்தி விடுகிறார்கள்.
கர்நாடகா மாநிலம் ராம் நகரில் ஒரு கிலோ பட்டு கூடு ரூ.670-க்கும், ஆந்திராவில் ரூ.570-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஆனால் வாணியம்பாடியில் ரூ.350-க்கு விலை நிர்ணயம் செய்கின்றனர். பட்டு விவசாயிகள் கொண்டுவரும் பட்டு கூடுகளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். எங்களின் குறைகளை கேட்டால் காவல்துறையினரை வரவழைத்து மிரட்டுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்ந்து அவர்கள் பட்டு கூடுகளை ஆந்திர மாநிலத்திற்கு விற்பனைக்காக எடுத்துச் சென்றனர்.
விவசாயிகள் போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.