திண்டிவனத்தில் ரூ.25½ கோடியில் புதிய பஸ் நிலையம் அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு
திண்டிவனத்தில் ரூ.25½ கோடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடத்தை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார்.
திண்டிவனம்,
திண்டிவனத்தில் இந்திராகாந்தி பஸ் நிலையம் உள்ளது. 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த பஸ்நிலையம் ஆகும். இங்கு புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் பல்வேறு காரணங்களால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியில் உள்ளது.
இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டசபையில் திண்டிவனத்தில் ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் மேம்பாட்டு திட்டத்தில் அரசு மானியத்துடன் புதிய நவீன பஸ் நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
அதனடிப்படையில் திண்டிவனத்தில் ரூ.25.50 கோடி செலவில் சென்னை சாலையில் உள்ள சலவாதி பகுதியில் 6 ஏக்கர் பரப்பளவில் புதிய ேஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதிரி வரைபடம்
இந்த நிலையில் புதிய பஸ்நிலையம் அமைய உள்ள பகுதியை நகராட்சி நிர்வாகம் , நகர்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து, பஸ்நிலையத்தின் மாதிரி வரைபடைத்தையும் அவர்கள் வெளியிட்டார்கள்.
மூலதான வருவாய்
ஆய்வு முடிவில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறுகையில், திண்டிவனம் பகுதியில் புறநகர் பஸ் நிலையம் ரூ. 25.50 கோடி செலவில் அமைய உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
தமிழகத்தில் மூலதன வருவாயை கூடுதலாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எங்கெங்கு இடம் இருக்கிறதோ , அங்கெல்லாம் பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கு நகர வளர்ச்சி துறை மூலமாக முயற்சி செய்யுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி பஸ்நிலையங்கள் கட்டப்பட உள்ளது. மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர குடிநீர் திட்டங்கள், கழிப்பறை வசதி திட்டங்கள், மழைநீர் வடிகால், வசதி 30 ஆயிரம் விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றுவது போன்றவற்றுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சட்டமன்றத்தில் வெளியிட்ட திட்டங்களை அரசு ஆணையாக மாற்றி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.
ஆய்வின் போது விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, உள்பட பலர் உடனிருந்தனா்.