பகண்டை கூட்டுரோடு அருகே மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த வாலிபர் கைது
பகண்டை கூட்டுரோடு அருகே மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த வாலிபர் கைது
ரிஷிவந்தியம்
பகண்டை கூட்டுரோடு அடுத்த பழையசிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அம்சவேல் மனைவி விருத்தாம்பாள்(வயது 65). இவர் அதே கிராமத்தில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று விருத்தம்பாள் கடையில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து விருத்தாம்பாள் கொடுத்த புகாரின் பேரில் பகண்டைகூட்டுரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து 2 மர்மநபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் விருத்தாம்பாளிடம் தங்க சங்கிலியை பறித்தவர்கள் உளுந்தூர்பேட்டை தாலுகா அயன்குஞ்சரம் கிராமத்தைச் சேர்ந்த கோதண்டபாணி மகன் ஏழுமலை(23) மற்றும் இவரது நண்பர் கூ.தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மகன் திருநாவுக்கரசு(21) என தெரியவந்தது. இதையடுத்து இளையனார்குப்பம் கிராமத்தில் தனது மாமனார் வீட்டில் பதுங்கி இருந்த ஏழுமலையை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 9 பவுன் சங்கிலியை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இவரது நண்பர் திருநாவுக்கரசை வலைவீசி தேடி வருகின்றனர்.