கோவை அருகே சேற்றில் வழுக்கி விழுந்த காட்டு யானை
கோவை அருகே சேற்றில் வழுக்கி விழுந்த காட்டு யானை
துடியலூர்
கோவையை அடுத்த துடியலூர் கதிர்நாயக்கன்பாளையம் வனப்பகுதிக்குள மழை காரணமாக ஆங்காங்கே குழிபோன்ற பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் பல இடங்களில் சேறும், சகதியுமாக மாறி காணப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியில் இரை தேடி வந்த இளம் வயது ஆண் காட்டுயானை ஒன்று சேற்றில் வழுக்கி விழுந்தது. போராடி பார்த்தும் அதனால் எழும்ப முடியவில்லை. இதனால் பலத்த சத்தம்போட தொடங்கியது.
இதனை அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வன அலுவலர் செல்வராஜ் தலைமையில் வனத்துறை களப் பணியாளர்கள் உடனடியாக சென்று அந்த யானையை மீட்டனர். கீழே விழுந்த அதிர்ச்சியில் சோர்வாக காணப்பட்ட அந்த யானைக்கு முதுமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் டாக்டர்ராஜேஷ்குமார் மற்றும் கோவனூர் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் வெற்றிவேல் ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.
பின்னர் அந்த யானை அங்கிருந்து தானாக நடந்து புதர்ப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனை களப்பணியாளர்கள் தொலைவில் இருந்து கண்காணித்து வருகின்றனர்.