லாடபுரம் மயிலூற்று அருவியில் வெள்ளநீர் வரத்து அதிகரிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தின் குற்றாலமான லாடபுரம் மயிலூற்று அருவியில் வெள்ளநீர் வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2021-11-06 16:38 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர்
ஆர்ப்பரித்து கொட்டுகிறது
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சிலதினங்களாக பெய்து வரும் மழைகாரணமாக ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பச்சைமலைத்தொடரில் கடந்த 2 நாட்களாக காற்றுமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனத்த மழைபெய்துள்ளது. பெரம்பலூரில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில், லாடபுரம் அருகே பச்சைமலைத்தொடரில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தின் குற்றாலம் என்று அழைக்கப்படும் மயிலூற்று அருவியில் நீர்வரத்து நேற்று முன்தினம் முதல் அதிகரித்து வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஏரிகள் நிரம்பும்
தொடர்மழை காரணமாக மலைப்பகுதிகளில் ஊற்றுகள் கசியத்தொடங்கி உள்ளதாலும், வடகிழக்கு பருவமழை வலுத்துபெய்துவருவதாலும், மயிலூற்று அருவி அமைந்துள்ள பச்சமலை உச்சியில் மற்றொரு அருவியான ஆனைக்கட்டி (செக்காத்திப்பாறை) அருவியிலும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
பெரம்பலூர், குரும்பலூர், துறைமங்கலம் மற்றும் சுற்றுப்புற மக்கள் லாடபுரம் அருகே பச்சைமலையில் பெய்யும் மழையை நம்பி உள்ளனர். செக்காத்தி பாளையில் உள்ள ஆனைகட்டி அருவியில் வெள்ளநீர் அதிகரிக்கும் பட்சத்தில் உபரி நீர் லாடபுரம், ஈச்சம்பட்டி, குரும்பலூர், பாளையம், செஞ்சேரி, அரணாரை, பெரம்பலூர் துறைமங்கலம் ஏரிகளை நிரப்பும். 
பொதுமக்கள் கோரிக்கை
தற்போது பெய்துவரும் மழை காரணமாக பச்சைமலையில் சீசன் சரியானநேரத்தில் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருவிக்கு சென்றுவருவது கடினமான நிலையில் உள்ளது. 
மயிலூற்று அருவிக்கு செல்பவர்களின் நலனை கருத்தில்கொண்டு சாலை வசதியை மேம்படுத்தி தந்திடவும், அடிப்படை வசதிகளைசெய்து தரவும் மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி நிர்வாகமும் வனத்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பச்சைமலையின் இயற்கை சூழலை பாதிப்பிற்கு உள்ளாகாத வகையிலும், மயிலூற்று அருவி அமைந்துள்ள பகுதியை சீர்கேடு ஏற்படாதவாறு பாதுகாத்திட முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்