நாலாட்டின்புத்தூரில் பொதுமக்கள் சாலை மறியல்
நாலாட்டின்புத்தூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூரில் பட்டாசு வெடித்ததில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த அய்யலுராஜ், யுவராஜ், கண்ணன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் கைதான கண்ணனின் உறவினர்கள் சுமார் 50 பேர் நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டனர். கண்ணனை விடுவிக்க வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் மெயின் ரோட்டுக்கு வந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர்கள் முத்து (கயத்தாறு), சுஜித் ஆன்ந்த் (கோவில்பட்டி கிழக்கு), சபாபதி (மேற்கு), கஸ்தூரி (கழுகுமலை) மற்றும் போலீசார் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
மேலும் ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்தவர்கள் நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.