டிரைவரை 2வது நாளாக தேடும் பணி தீவிரம்

டிரைவரை 2வது நாளாக தேடும் பணி தீவிரம்

Update: 2021-11-06 14:37 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள காளியப்பகவுண்டன்புதூரை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 45). டிரைவர். இவர் தனது நண்பர்களுடன் அந்த வழியாக ஓடும் ஆழியாற்று தரைபாலத்தில் நேற்று முன்தினம் மாலை அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் ஆற்றில் தவறி விழுந்தார். தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆழியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்று வெள்ளத்தில் கந்தசாமி அடித்து செல்லப்பட்டார். இதுபற்றி அறிந்ததும் பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். 
 நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் 7 மணி வரை தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.இதற்கிடையில் இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று காலை 9 மணி முதல் 2-வது நாளாக மீண்டும் தீயணைப்பு படை வீரர்கள் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும், மணக்கடவில் உள்ள தடுப்பணைக்கு சென்று தீயணைப்பு படை வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று மாலை வரை தேடி பார்த்தும் கந்தசாமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ஆனைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்