தனபால், ரமேசிடம் போலீஸ் காவல் விசாரணை நிறைவு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனபால், ரமேசிடம் போலீஸ் காவல் விசாரணை நிறைவு பெற்றது. இதனால் அவர்கள் கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஊட்டி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனபால், ரமேசிடம் போலீஸ் காவல் விசாரணை நிறைவு பெற்றது. இதனால் அவர்கள் கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோடநாடு வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017 அன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ் சாமி, மனோஜ்சாமி, ஜித்தின்ஜாய், உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் வழக்கில் முழு விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பின்னர் நடந்த விசாரணையில் வழக்கில் தடயங்களை அழித்ததாக விபத்தில் இறந்த கனகராஜின்(ஜெயலலிதா கார் டிரைவர்) அண்ணன் தனபால், நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தனித்தனியாக விசாரணை
கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர்களை தனித்தனியாக சோலூர்மட்டம் போலீசார் 2 முறை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் தனபாலை மட்டும் மேலும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க குன்னூர் கோர்ட்டு அனுமதி வழங்கியது.
விசாரணையின்போது தனபால், ரமேஷ் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு வாகனத்தில் அழைத்துச்சென்றனர். அங்கு கனகராஜ் தொடர்பான செல்போன் ஆதாரங்களை அழித்தது குறித்து விசாரணை நடத்தி பதிவு செய்தனர். பின்னர் தனபாலுக்கு 11 நாள், ரமேசுக்கு 10 நாள் போலீஸ் காவல் நேற்றுடன் நிறைவடைந்தது.
சிறையில் அடைக்க உத்தரவு
இதைத்தொடர்ந்து அவர்களை நேற்று மாலை தனிப்படை போலீசார் குன்னூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ரமேஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து போலீஸ் காவல் விசாரணை நிறைவு பெற்றதால் தனபால், ரமேஷ் ஆகிய 2 பேரையும் சிறையில் அடைக்க குன்னூர் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அவர்களை போலீசார் பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றி அழைத்துச்சென்று, கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த முக்கிய தகவல்கள் அடிப்படையில் மேலும் சிலரிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.