போடி பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அரசு மாணவிகள் விடுதி சுற்றுச்சுவர் இடிந்தது
போடியில் கொட்டி தீர்த்த மழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அரசு மாணவிகள் விடுதியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
தேனி:
தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவில் தொடங்கி விடிய, விடிய மழை பெய்தது. இதில் போடி, தேனி, பெரியகுளம், சோத்துப்பாறை பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. போடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
போடி அணை பிள்ளையார் தடுப்பணை, தேனி கொட்டக்குடி தடுப்பணை ஆகிய இடங்களில் தடுப்பணைகளை தாண்டி வெள்ளம் சீறி பாய்ந்தது. இந்த மழை வெள்ளம் தேனி பங்களாமேடு பகுதியில் முல்லைப்பெரியாற்றுடன் சங்கமித்து வைகை அணைக்கு சென்றது.
தேனி கொட்டக்குடி ஆற்றில் நள்ளிரவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது இரைச்சலுடன் தண்ணீர் ஓடியது. இதனால், சுப்பன்தெருவில் கொட்டக்குடி ஆற்றின் கரையோரம் வசித்த மக்கள் சிலர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீடுகளுக்கு சென்று இரவில் தங்கினர். நேற்று மாலையில் ஆற்றில் வெள்ளம் சற்று குறைந்து இருந்தது. இதனால், இளைஞர்கள் சிலர் ஆற்றில் மீன் பிடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
சுற்றுச்சுவர் இடிந்தது
இதனிடையே கனமழையால் போடி அரசு ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. தீபாவளி பண்டிகை விடுமுறை காரணமாக மாணவிகள் அனைவரும் தங்களின் வீடுகளுக்கு சென்று இருந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (மில்லிமீட்டரில்) வருமாறு:-
வீரபாண்டி-35, ஆண்டிப்பட்டி--6.6, அரண்மனைப்புதூர்-7.4, போடி-55.6, கூடலூர்-7.3, மஞ்சளாறு-15, பெரியகுளம்-45, சோத்துப்பாறை-30, உத்தமபாளையம்-4.4, வைகை அணை-7.8, முல்லைப்பெரியாறு-6.6, தேக்கடி-13.8 என மழையளவு பதிவானது.