நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி 66 அடியை எட்டிய வைகை அணை கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலியாக வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Update: 2021-11-06 11:07 GMT
ஆண்டிப்பட்டி;

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நேற்றுக்காலை 10 மணிக்கு 66 அடியை எட்டியது. 
இதனையடுத்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி வைகை அணை மதகுபகுதியில் அமைக்கப்பட்ட அபாய சங்கு ஒலிக்கப்பட்டது.

ஓரிருநாளில் நிரம்பும்

 வைகை அணைக்கு தற்போது வினாடிக்கு 4 ஆயிரத்து 168 கனஅடி நீர்வரத்து உள்ளது. இதனால் வைகை அணை இன்னும் ஓரிருநாளில் நிரம்பும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
அணை நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்தவுடன் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். 70 அடியை எட்டியவுடன் 3-வது மற்றும் கடைசி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக ஆற்றில் திறந்துவிடப்படும். வரலாற்றில் முதன்முறையாக ஒரே ஆண்டில் வைகை அணை 3-வது தடவையாக நிரம்ப உள்ளதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்