பஸ் கண்ணாடியை உடைத்த வழக்கில் 2 பேர் கைது

பள்ளிப்பட்டு தாலுகா அருகே அரசு பஸ் மீது கற்களை வீசி கண்ணாடியை உடைத்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-06 04:55 GMT
பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை அருகே 2 நாட்களுக்கு முன்னர் சோளிங்கரில் இருந்து அரசு பஸ் ஒன்று திருத்தணிக்கு ஆர்.கே. பேட்டை வழியாக சென்றது. செல்லாத்தூர் கிராமம் அருகே சிலர் அரசு பஸ் மீது கற்களை வீசி கண்ணாடியை உடைத்தனர்.

இது குறித்து அரசு பஸ் டிரைவர் ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஆர்.கே. பேட்டை அருகே ராஜா நகரம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 23), கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த தேவா (24) ஆகியோர் அரசு பஸ் மீது கற்களை வீசி கண்ணாடியை உடைத்தவர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் அவர்களை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்