கனமழையால் ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு போக்குவரத்து துண்டிப்பால் வாகன ஓட்டிகள் அவதி
கனமழையால் ஏற்காடுக்கு செல்லும் குப்பனூர் மலைப்பாதையில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
சேலம்
மலைப்பாதையில் மண்சரிவு
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சேலம் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தீபாவளியன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை கொட்டி தீர்த்தது.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த குப்பனூரில் இருந்து ஏற்காடுக்கு செல்லும் சாலையில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
இதனால் சாலையின் பல்வேறு இடங்களில் சிறிய மற்றும் பெரிய பாறைகள் மற்றும் மண் சரிந்து கிடந்ததாலும், சில இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்ததாலும் சாலை சேதமடைந்து போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது. இதனால் குப்பனூர் வழியாக ஏற்காடுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அதேபோல், ஏற்காட்டில் இருந்து குப்பனூர் வழியாக சேலத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் தவித்தனர்.
சீரமைக்கும் பணி
ஏற்காட்டிற்கு சென்ற சுற்றுலா பயணிகள் சிலர் மண் சரிவில் சிக்கினர். இதுகுறித்து அவர்கள் சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மலைப்பாதையில் சிக்கிய சுற்றுலா பயணிகளை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, ஏற்காடு-குப்பனூர் சாலையில் மண்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று காலை அங்கு சென்றனர். பின்னர் அவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையை சரி செய்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கலெக்டர் ஆய்வு
மேலும் மண்சரிவு குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் உடனடியாக அங்கு சென்று சாலையில் ஏற்பட்ட மண் சரிவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் சாலையில் கிடந்த பாறைகளை அகற்றி, சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து ஏற்காடு-குப்பனூர் மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவை சரிசெய்யும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.
வாகனங்கள் செல்ல தடை
ஏற்காடு-குப்பனூர் சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் ஏற்காட்டிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் சாலையிலும், ஏற்காட்டில் இருந்து குப்பனூர் செல்லும் மலைப்பாதையிலும் எங்கேயாவது மண் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.