ராசிபுரம் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது வீடுகள் இடிந்து விழுந்தன; பொதுமக்கள் அவதி

ராசிபுரம் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது வீடுகள் இடிந்து விழுந்தன; பொதுமக்கள் அவதி

Update: 2021-11-05 17:46 GMT
ராசிபுரம், நவ.6-
ராசிபுரம் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் வீடுகள் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
கனமழை
நாமக்கல் மாவட்டம ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ராசிபுரம், குருக்கபுரம், கூனவேலம்பட்டி புதூர், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி உள்பட தாலுகா முழுவதும் கனமழை பெய்தது. ராசிபுரம் பகுதியில் 8 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்ததாக பதிவு ஆகியுள்ளது. 
ராசிபுரம் அருகே உள்ள அலவாய்மலைப் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் ராசிபுரம் அருகே முத்துகாளிப்பட்டி ஊராட்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகே விக்னேஷ் நகர் பகுதியில் உள்ள கசிவுநீர் குட்டையில் தண்ணீர் தேங்கி நின்றது. கசிவுநீர் குட்டையில் தேங்கி நின்ற மழைநீர் வெளியேற முடியாததால் அருகில் உள்ள வயல்களிலும், வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது. 
வீடுகள் இடிந்தன
மேட்டுக்காடு பகுதியில் உள்ள கூலித்தொழிலாளர்கள் அத்தி, நடேசன், வள்ளி ஆகியோர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு எழுந்து வந்து ஆடு, மாடுகளை காப்பாற்றினர். கசிவு நீர் குட்டையில் தேங்கியிருந்த மழைநீர் வெளியேறுவதற்கு வசதியாக சாலை விரிவாக்கம் செய்யப்பட்டபோது குட்டையின் ஒருபக்கம் கொட்டப்பட்டிருந்த மண் அகற்றப்பட்டது. மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் ஓடைகளில் உள்ள செடி, கொடிகள், முட்புதர்கள் அகற்றப்பட்டு தண்ணீர் எளிதாக வெளியேற வகை செய்யப்பட்டது.
அதேபோல் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த சவுந்தரம் என்ற பெண்ணின் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. அதேபோல் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கவுண்டம்பாளையம் தேவேந்திரர் தெருவை சேர்ந்த இளங்கோ என்பவரின் வீடும் இடிந்து விழுந்தது.
கோரிக்கை
இதற்கிடையே மழைநீர் வீடுகளுக்குள் புகுந்த இடத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு அத்தி, நடேசன், வள்ளி ஆகியோர் குடும்பத்தினருக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய நிவாரண உதவியை வழங்கினார். மேலும் கசிவுநீர் குட்டையில் இருந்து மழைநீர் வெளியேற்றப்படுவதையும் அருகில் இருந்த ஓடையை பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வார பட்டதையும் பார்வையிட்டார்.
மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடாமல் தடுக்க ஏ.டி.சி. டெப்போவில் இருந்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் வரை மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும் என்றும், கசிவுநீர் குட்டையை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது அமைச்சருடன் ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அதிகாரி தனபால், வருவாய் ஆய்வாளர் ராஜசேகரன், ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், முத்துக்காளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அருள், துணைத்தலைவர் சிலம்பரசி, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் ராஜேஷ் பாபு, ராசிபுரம் நகர தி.மு.க. செயலாளர் சங்கர், அவைத்தலைவர் அமிர்தலிங்கம், கலைமணி, கந்தசாமி, மோகன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
நிவாரண பொருட்கள்
கனமழையால் கோனேரிப்பட்டி சவுந்தரம் என்ற பெண்ணின் வீடு இடிந்து விழுந்தது. இதையொட்டி அந்த பெண்ணுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகை ரூ.4 ஆயிரத்து 100 மற்றும் 10 கிலோ அரிசி, 1 லிட்டர் மண்எண்ணெய், வேட்டி, சேலை ஆகியவற்றை தாசில்தார் கார்த்திகேயன் வழங்கினார். அதேபோல் கவுண்டம்பாளையம் இளங்கோ என்பவருக்கு 10 கிலோ அரிசி, 2 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ சர்க்கரை, 1 லிட்டர் மண்எண்ணெய், வேட்டி,சேலை ஆகியவற்றை வருவாய்த் துறையினர் வழங்கினர்.

மேலும் செய்திகள்