குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க விழிப்புணர்வுடன் மக்கள் செயல்பட வேண்டும்

குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க விழிப்புணர்வுடன் மக்கள் செயல்பட வேண்டும் என்று முதன்மை மாவட்ட நீதிபதி கூறினார்.

Update: 2021-11-05 17:26 GMT
சிவகங்கை, 
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க விழிப்புணர்வுடன் மக்கள் செயல்பட வேண்டும் என்று முதன்மை மாவட்ட நீதிபதி கூறினார்.
பவள விழா
சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சமரச மைய கட்டிடத்தில் 75-வது சுதந்திர தின பவள விழாவினை முன்னிட்டு நீதித்துறை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, மாவட்ட சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து துறை, மகளிர் திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பேரிடர் மேலாண் மைத்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அரங்குகள் அமைக்கப்பட்டு அந்தந்த துறைகளின் சார்பில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.
முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
மாணவ-மாணவிகள் படிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்த வேண்டும். தாய், தந்தையரின் சொல்லை மதித்து நடக்க வேண்டும். உங்களின் உண்மையான நலம் விரும்பி தாய், தந்தை மட்டும் தான் என்பதை உணர வேண்டும். பாலியல் குற்றங்கள் குறித்தும், குழந்தைகளை கடத்தி கொத்தடிமையாக பயன்படுத்துதல் குறித்தும் உடனடியாக தகவல் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மூன்றாம் பாலினத்தவர்களை சக மனிதராக நடத்த வேண்டும். அதிக அளவில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க நாம் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும். மாணவர்கள் ஒவ்வொருவரும் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்து முன்னேற வேண்டும். 
தீயவழி
செல்போன் நமக்கு பலவகையில் உதவியாக இருக்கிறது. அதனை நாம் தீய வழிக்கு பயன்படுத்தாமல் நல்ல தகவல் களை பெற மட்டும் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும். அந்த நிலையை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். உழைப்பின் பயன் நாம் வெற்றிபெற வழிவகுக்கும். 
இவ்வாறு அவர் கூறினார்
நிகழ்ச்சியில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேசுவரி, லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உதயவேலன், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெற்றிச்செல்வன், வக்கீல்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்
முன்னதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நடமாடும் ஆலோசனை வாகனத்தை முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்