அரகண்டநல்லூர் போலீஸ் நிலையம் எதிரே சப்-இன்ஸ்பெக்டர் மீது பட்டாசு கொளுத்திப்போட்டு கொல்ல முயற்சி 4 பேர் கைது

அரகண்டநல்லூர் போலீஸ் நிலையம் எதிரே சப்-இன்ஸ்பெக்டர் மீது பட்டாசு கொளுத்திப்போட்டு கொலை செய்ய முயன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-11-05 16:59 GMT
திருக்கோவிலூர், 

பொதுமக்களுக்கு இடையூறு

அரகண்டநல்லூர் போலீஸ் நிலையம் எதிரே நேற்று முன்தினம் திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக 5 பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டு பட்டாசு வெடித்தனர்.
இதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் டார்ஜான்(வயது 55) அவர்களிடம் சென்று போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் பட்டாசு வெடிக்குமாறும், அங்கிருந்து கலைந்து செல்லுமாறும் எச்சரித்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் மீது சரமாரி தாக்குதல்

இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் திடீரென பட்டாசை கொளுத்தி சப்-இன்ஸ்பெக்டர் டார்ஜான் மீது வீசினார். இதில் சுதாரித்துக்கொண்ட டார்ஜான் சற்று விலகி கொண்டதோடு, பட்டாசை வீசிய நபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றார். 
இதனால் ஆத்திரமடைந்த மற்ற 4 பேரும் டார்ஜானை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸ் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், சப்-இன்ஸ்பெக்டர் புனிதவல்லி மற்றும் போலீசார் விரைந்து வந்து 4 பேரையும் மடக்கி பிடித்தனர். ஒருவர் மட்டும் தப்பியோடி விட்டாா். 

4 பேர் கைது

பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அரகண்டநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அர்ச்சுனன் மகன் ஆகாஷ்(19), சரவணன் மகன் விக்னேஷ்(27), கலியன் மகன் சோமு (35), வள்ளலார் கோவில் தெருவைச் சேர்ந்த சம்சுதீன் மகன் ஷானவாஸ் ஆகியோர் என்பதும், தப்பி ஓடியது அரகண்டநல்லூர் மகாத்மா காந்தி ரோட்டை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ஹரிதரன்(25) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் மீதும் கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் விக்னேஷ், ஆகாஷ், சோமு, ஷானவாஸ் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய ஹரிதரனை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்