திருவெண்ணெய்நல்லூர் அருகே தென்பெண்ணையாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவி சாவு தாய் கண்எதிரே நடந்த சோகம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவி உயிரிழந்தார். தாய் கண் எதிரே நடந்த இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சித்தலிங்கமடம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களின் மகள் சைலத்மீரா (வயது 10). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், மகாலட்சுமியின் தந்தையான திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த வெள்ளிக்கண்ணு என்பவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து அவரது இறுதி சடங்கில் பங்கேற்க சின்னராஜ் குடும்பத்தினர் சென்றிருந்தனர்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்
இறுதி சடங்கு முடிந்த பின்னர், மதியம் 12.30 மணியளவில் அருகே உள்ள தெண்பெண்ணையாற்றில் குளிப்பதற்காக சைலத்மீரா, மகாலட்சுமி மற்றும் உறவினர் பெண் என்று 3 பேர் சென்றனர்.
அப்போது சைலத்மீரா தண்ணீரில் குளிக்க இறங்கிய போது, ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். உடன் அதர்ச்சியடைந்த அவரது தாய் கதறிசென்று அவரது உறவினர்களிடம் சம்பவம் குறித்து கூறியுள்ளார். அவரது உறவினர்கள் திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலயைத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
பிணமாக மீட்பு
அதன்பேரில் நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று சைலத்மீராவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அதில் மாலை 3.45 மணிக்கு சிறுமியை பிணமாக தீயணைப்பு வீரர்கள் மீ்ட்டனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.