கம்பம் அருகே 18-ம் கால்வாய் தொட்டி பாலம் உடைந்தது மண் அரிப்பால் சாலை துண்டிப்பு

கம்பம் அருகே 18-ம் கால்வாய் தொட்டி பாலம் உடைந்தது. மேலும் மண் அரிப்பால் சாலை துண்டிக்கப்பட்டது.

Update: 2021-11-05 15:34 GMT
கம்பம்:
உத்தமபாளையம், போடி பகுதிகளில் மானாவாரி நிலங்கள் பயன்பெறும் வகையில் 18-ம் கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், தேவாரம், வழியாக சுத்தகங்கை ஓடை வரை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக பல இடங்களில் தரைப்பாலம், தொட்டி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டம் உயரும் போது 18-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும். அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந்தேதி 18-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை கம்பம் அருகேயுள்ள ஊத்துக்காடு மேற்கு பகுதியில் உள்ள 18-ம் கால்வாயின் தொட்டி பாலம் உடைந்தது. இதனால் தண்ணீர் புதுப்பட்டி இடையன்குளத்திற்கும், கோசந்திர ஓடைக்கும் சென்றது. தண்ணீர் புதுப்பட்டியை தாண்டி செல்லவில்லை. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக 18-ம் கால்வாய்க்கு செல்லும் தண்ணீரை நிறுத்தினர்.
இந்தநிலையில்  18-ம் கால்வாய் தண்ணீருடன், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கோசந்திர ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதைத்தொடர்ந்து மண் அரிப்பின் காரணமாக ஊத்துக்காடு-புதுப்பட்டி சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் கம்பத்தில் இருந்து ஊத்துக்காடு வழியாக விவசாய நிலங்களுக்கும், கோம்பை செல்வதற்கும் பொதுமக்கள், விவசாயிகள் பெரும் அவதியடைந்தனர். இதேபோல் தேனி-கம்பம் நெடுஞ்சாலையில் உள்ள கோசந்திர ஓடை பாலத்திலும் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பாலம் சேதமடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கலெக்டர் முரளிதரன் உத்தரவின்பேரில் உத்தமபாளையம் தாசில்தார் அர்ஜுனன் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இடையன்குளம் உடைந்து விடாமல் இருக்க குளத்திலிருந்து அந்த பகுதிகளில் உள்ள ஓடைகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, 18-ம் கால்வாயில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளோம். அந்த பணிகள் முடிவடைந்தவுடன் மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என்றனர். 

மேலும் செய்திகள்