பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றிகள்
உடுமலை அருகே மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்தன. இவற்றை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
தளி, நவ.6-
உடுமலை அருகே மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்தன. இவற்றை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
மக்காச்சோளம் சாகுபடி
உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாகக் கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தின் மூலமாக விளைநிலங்கள் பாசனவசதி பெற்று வருகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு தென்னை, வாழை, கரும்பு, காய்கறிகள், தானியங்கள், கீரைவகைகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயத் தொழிலை நம்பி எண்ணற்ற கூலித் தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பி.ஏ.பி. 4ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.அதைத்தொடர்ந்து விவசாயிகள் மக்காச்சோளம், காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட இடைவெளியில் மழை பெய்து வந்ததால் மக்காச்சோளம் பயிர்கள் நன்கு வளர்ந்து கதிர்கள் பிடித்துள்ளது.அதில் தற்போது மணிகள் சூழ்ந்து பால் ஏறும் தருவாயில் உள்ளது.
காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
இந்த சூழலில் தளி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காட்டுப்பன்றிகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து அவை மக்காசோளபயிர்களை நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருவதுடன் நஷ்டமடையும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
அந்த வகையில் பள்ளபாளையத்தைச் சேர்ந்த விவசாயி ரத்தினகுமார் தோட்டத்தில் புகுந்த காட்டுப்பன்றிகள் மக்காச்சோள பயிர்களை அழித்து நாசம் செய்தது.இதுகுறித்து அவர் உடுமலை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வனச்சரக அலுவலர் தனபாலன் தலைமையில் வனவர் உள்ளிட்ட வனத்துறையினர் பள்ளபாளையம் பகுதியில் ஆய்வு மேற் கொண்டனர்.அப்போது காட்டுப்பன்றிகளால் ஏற்படுத்தப்பட்ட சேதம் மற்றும் இழப்பீடு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் இதே போன்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் தகவல் தெரிவித்தால் அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய நிவாரணம் பெற்றுத் தருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.