பலத்த மழையால் நீர்வரத்து கூடியது: பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

பலத்த மழையால் நீர்வரத்து கூடியது: பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு 2 ஆயிரம் கன அடியாக வெளியேற்றப்படுகிறது.

Update: 2021-11-04 16:54 GMT
சென்னை,

வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

நேற்று காலை நீர்மட்டம் 34 அடியாக பதிவானது. 2.817 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதனிடையே ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் பாய்ந்து பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு நேற்று காலை பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களாக வினாடிக்கு 480 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒதப்பை, அணைக்கட்டு வழியாக சென்று எண்ணூர் துறைமுகத்தில் கடலில் கலக்கிறது.

மேலும் செய்திகள்