வாசுதேவநல்லூர் அருகே பட்டப்பகலில் பயங்கரம் ரேஷன் கடைக்கு சென்ற பெண் சரமாரி வெட்டிக்கொலை வாலிபர் கைது

ரேஷன் கடைக்கு சென்ற பெண் சரமாரி வெட்டிக்கொலை

Update: 2021-11-03 22:16 GMT
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அருகே பட்டப்பகலில் ரேஷன் கடைக்கு சென்ற பெண் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் கடைக்கு சென்ற பெண்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள வேலாயுதபுரம் வாட்டர் டேங்க் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியம். இவருடைய மனைவி மனோன்மணி (வயது 40). இவர் நேற்று காலையில் அங்குள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க சென்றார். 
அப்போது, அங்கு வந்த வாலிபர் மனோன்மணியிடம் தகராறு செய்தார். மேலும், ஆத்திரம் அடைந்த அவர் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் மனோன்மணியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் சுற்றிவளைத்தனர்
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். 
பின்னர் இதுகுறித்து உடனடியாக வாசுதேவநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மனோன்மணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த வாலிபரை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
கோழி மேய்ந்த விவகாரம்
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பல்ேவறு தகவல்கள் வெளியானது. அதாவது மனோன்மணியின் எதிர்வீட்டைச் சேர்ந்தவர் இன்னாசி. இவரது வீட்டில் மனோன்மணி, அவரது தங்கை வளர்த்து வந்த கோழி அடிக்கடி மேய்ந்ததாகவும், அதை இன்னாசி விஷம் வைத்து கொன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் 2 குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதை ஊர்மக்கள் சமாதானம் செய்து வைத்து வந்தனர்.
இதுதொடர்பாக இன்னாசியின் மகன் கிறிஸ்டோபர் ராஜ் (21) என்பவர் அடிக்கடி மனோன்மணியிடம் தகராறு செய்து வந்தார். 
இந்த நிலையில் வெளியூரில் வேலை பார்த்து வந்த கிறிஸ்டோபர் ராஜ் தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார்.
கைது
நேற்று காலையில் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற மனோன்மணியை பின்தொடர்ந்து சென்று வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. அக்கம்பக்கத்தினர் அவரை பிடிக்க முயன்றபோது, அரிவாளால் வீசியதில் ஆர்.சி. தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (43), சூர்யா (19) ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 
மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிறிஸ்டோபர் ராஜை கைது செய்தனர்.
........

மேலும் செய்திகள்