நெல்லை-தென்காசியில் தொடர் மழை: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

நெல்லை-தென்காசியில் தொடர் மழை

Update: 2021-11-03 21:32 GMT
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
தொடர் மழை
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை விடிய, விடிய சாரல் மழையாக பெய்தது. 
இந்த நிலையில் அம்பை, சேரன்மாதேவி, பாபநாசம், மணிமுத்தாறு, செங்கோட்டை, களக்காடு, சங்கரன்கோவில், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று காலையில் பரவலாக மழை பெய்தது. நெல்லையில் நேற்று காலையில் வெயில் அடித்தது. மாலை 3 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 55 மில்லி மீட்டர் மழையும், தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்கரன்கோவில் பகுதியில் 42 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.  
ஆற்றில் வெள்ளப்பெருக்கு
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,843 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,805 கனஅடி வீதம் தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அந்த அணையின் நீர்மட்டம் 135.60 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 140.06 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 82.60 அடியாகவும், கடனாநதி அணை 83 அடியாகவும், ராமநதி அணை 79.90 அடியாகவும் உள்ளது. கடனாநதி நிரம்பியதால் அங்கு வருகின்ற 695 கனஅடி தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
மேலும் மழையால் ஓடைகள், கால்வாய்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அவை அனைத்தும் தாமிரபரணி ஆற்றில் கலந்து செல்கிறது. இதனால் நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலை சூழ்ந்தபடி தண்ணீர் செல்கிறது. மேலும் அங்குள்ள சுடலைமாடசாமி, கருப்பசாமி உள்ளிட்ட கோவில்களில் சிலைகள் மூழ்கியபடி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. 
குற்றாலம் அருவிகள்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் நேற்று முன்தினம் இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மழை நீடித்து வந்ததால் நேற்றும் 2-வது நாளாக அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவு தெரியாத அளவிற்கு தண்ணீர் கொட்டுகிறது. அருவிக்கரையில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் பாதையில் சேதம் ஏற்பட்டுள்ளது. பெண்கள் உடை மாற்றும் அறையில் ஒரு சுவரும் சேதமடைந்துள்ளது. இதேபோன்று ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
மழை அளவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
அடவிநயினார்-25, ஆய்க்குடி-36, அம்பை-15, மூைலக்கரைப்பட்டி-5, சேரன்மாதேவி-20, சேர்வலாறு-27, பாபநாசம்-10, தென்காசி-27, மணிமுத்தாறு 26, பாளையங்கோட்டை-55, செங்கோட்டை-21, குண்டாறு-25, நெல்லை-33, கருப்பாநதி- 18, களக்காடு-3, கடனாநதி-20, ராமநதி-8, சங்கரன்கோவில்-42, நாங்குநேரி-3, சிவகிரி-22.

மேலும் செய்திகள்