பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல்
பெங்களூரு விமான நிலையத்தில், நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக குடிபோதை ஆசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி விடுவித்தனர்.
பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்தில், நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக குடிபோதை ஆசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி விடுவித்தனர்.
நடிகர் விஜய் சேதுபதி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் இந்தி திணிப்பு உள்ளிட்ட சில சமூக விஷயங்கள் தொடர்பாக கருத்துகளை கூறி இருந்தார்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள படப்பிடிப்பு தளத்தில் நடந்து வரும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்து அங்கிருந்து பிடதிக்கு செல்வது வழக்கம்.
தாக்குதல்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் விஜய் சேதுபதி மற்றும் அவரது உதவியாளர் பெங்களூருவுக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது விமானத்தில் ஒரு நபர் குடிபோதையில் விஜய் சேதுபதியின் உதவியாளரிடம் தகராறு செய்து உள்ளார்.
அவரை சக பயணிகள் கண்டித்து உள்ளனர். பின்னர் விமானம் தரையிறங்கியதும் விஜய் சேதுபதியும், அவரது உதவியாளரும் விமான நிலையத்தை விட்டு வெளியே சென்று உள்ளனர். அப்போது விமானத்தில் தகராறு செய்த நபர் பின்பக்கமாக ஓடி வந்து விஜய் சேதுபதியை எட்டி, உதைத்தார். இதில் விஜய் சேதுபதி நிலைதடுமாறினார்.
குடிபோதை ஆசாமியிடம் விசாரணை
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தொழில் பாதுகாப்பு படையினர் விஜய் சேதுபதியை தாங்கி பிடித்தனர். பின்னர் அந்த நபரையும் பிடித்தனர். ஆனாலும் அந்த நபர் விஜய் சேதுபதியின் உதவியாளரை தாக்கினார். இந்த நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து விமான நிலைய போலீஸ் நிலையத்தில் விஜய் சேதுபதி உதவியாளர் புகார் அளித்தார்.
அதன்பேரில் விஜய் சேதுபதியை தாக்கிய நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். ஒரு மணி நேர விசாரணைக்கு பின்னர் அந்த நபர் விடுவிக்கப்பட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. விமானத்தில் பயணித்த போது ஏற்பட்ட தகராறில் தான் தாக்குதல் நடந்ததா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது உறுதியாக தெரியவில்லை.
இந்த சம்பவம் பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.