புனித் ராஜ்குமாரின் ரசிகர் தற்கொலை; மேலும் ஒருவர் மாரடைப்பால் சாவு
புனித் ராஜ்குமார் ரசிகர் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு: துமகூரு அருகே புனித் ராஜ்குமார் மறைவால் அவரது ரசிகர் தற்கொலை செய்துகொண்டார். மேலும் ஒருவர் மாரடைப்பால் இறந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார். கடந்த 6 நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவரது இறப்பை தாங்க முடியாமல் மாரடைப்பால் ரசிகர்கள் உயிரிழந்து வருவதும், ரசிகர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் புனித் ராஜ்குமார் மரணம் அடைந்ததால் மனம் உடைந்த மேலும் ஒரு ரசிகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
துமகூரு மாவட்டம் ஹெப்பூரை சேர்ந்தவர் பரத்(வயது 30). இவர் நடிகர் புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகர் ஆவார். இந்த நிலையில் புனித் ராஜ்குமார் இறந்த செய்தி கேட்டது முதல் பரத் அதிர்ச்சியில் இருந்து உள்ளார். மேலும் அவர் புனித் ராஜ்குமாரை நினைத்து தொடர்ந்து அழுது கொண்டே இருந்து உள்ளார்.
அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது பரத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட பரத் தான் எழுதிய கடிதத்தில் அப்புவின் மரணத்தை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.
அவர் சென்ற இடத்திற்கு நானும் செல்கிறேன், எனது கண்களை தானமாக எடுத்து கொள்ளுங்கள் என்று எழுதி இருந்தார். பரத்தின் ஆசைப்படி அவரது கண்களை பெற்றோர் தானமாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மாரடைப்பால் சாவு
இதுபோல துமகூரு தாலுகா ஹிரேஹள்ளியை சேர்ந்த அப்பு சீனிவாஸ் (வயது 32) என்ற ரசிகரும், புனித் ராஜ்குமார் இறந்த அதிர்ச்சியில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். புனித் ராஜ்குமார் மறைவையொட்டி இதுவரை தற்கொலை, மாரடைப்பால் 10-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.