நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- ஒரே நாளில் 7 அடி உயர்ந்தது

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்தது.

Update: 2021-11-03 20:04 GMT
சென்னிமலை
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம்    ஒரே நாளில் 7 அடி உயர்ந்தது. 
ஒரத்துப்பாளையம் அணை
சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையம் அணை உள்ளது. அணையின் நீர்மட்ட உயரம் 40 அடியாகும். 
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரத்துப்பாளையம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கோவை மாவட்டம் மற்றும் திருப்பூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. 
அணையின் நீர்மட்டம் 7 அடியாக இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 7 அடி உயர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் தற்போது 14 அடியாக உள்ளது. 
நுங்கும்-நுரையுமாக
நேற்று பகல் 2 மணி அளவில் வினாடிக்கு 889 கனஅடி வீதம் அணைக்கு தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நுங்கும், நுரையுமாக தண்ணீர் செல்கிறது. அணைக்கு வந்த தண்ணீரில் உப்புத்தன்மை 1000 டிடிஎஸ் அளவில் இருந்ததாக பொதுப்பணித்துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.  நொய்யல் ஆற்று பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்