தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-11-03 19:55 GMT
பஸ்கள் நின்று செல்லுமா?
தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு பொதுமக்கள் வசதிக்காக நிழற்குடையுடன் கூடிய பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டது. இங்கு பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வசதியாக நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் இந்த பகுதியில் புறநகர் பஸ்கள் நிற்பதில்லை. எனவே ஆஸ்பத்திரி முன்பு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மகேஸ்வரன், தர்மபுரி.


சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா நரசிங்கபுரம் வள்ளல் பாரி தெருவில் கடந்த பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. தற்போது பெய்து வரும் மழையால் அந்த தெரு சேறும்-சகதியுமாக காட்சி அளிக்கிறது.  இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், நரசிங்கபுரம், சேலம்.

மின்சார கம்பிகளால் ஆபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியில் செயல்படும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் அருகில் மிகவும் ஆபத்தான நிலையில் மரத்துக்கு மேல் பகுதியில் மின்கம்பிகள் செல்கின்றன.  தற்போது மழைக்காலம் என்பதால் பெரிய விபத்துகள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் நல்லது.
-தினேஷ், கல்லாவி, கிருஷ்ணகிரி.

பள்ளிக்கட்டிடம் சீரமைக்கப்படுமா? 
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் பழுதாகி ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. எனவே மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளிக்கட்டிடத்தை  விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? 
ஊர்மக்கள், பொட்டிரெட்டிப்பட்டி, நாமக்கல்.


எரியாத தெருவிளக்குகள்
சேலம் செவ்வாய்ப்பேட்டை மேம்பாலம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், கொண்டலாம்பட்டி பைபாஸ், அம்மாபேட்டை மிலிடெரி பகுதிகளில் தெருவிளக்கு மற்றும் சாலையில் உள்ள மின் விளக்குகள் எரிவதில்லை. எனவே தக்க நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை சரி செய்ய வேண்டும்.
ஜி.வேலாயுதம், அம்மாபேட்டை, சேலம்.

சேலம் அம்மாபேட்டை 9-வது வார்டு சத்யா நகர் பகுதியில் 10 நாட்களாக தெருவிளக்குகள் எரிவது இல்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர பயப்படுகிறார்கள்.  எனவே அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து தெருவிளக்கு எரிய செய்ய நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?
-ஊர்மக்கள், சத்யா நகர், சேலம்.

மதுபிரியர்களின் தொல்லை
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா நங்கவள்ளி ஒன்றியம் கரிக்காப்பட்டி பகுதியில் உள்ள பழைய பஞ்சாயத்து அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் ஒரு சில மர்ம நபர்கள் மது அருந்துவது மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி தகராறு ஏற்படுவதால் பொதுமக்கள் பயப்படுகிறார்கள். எனவே அந்த பகுதியில் போலீசார் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-கோ.சின்னத்தம்பி, மேட்டூர்.

தரைமட்ட பாலத்தில் தேங்கும் மழைநீர்

நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் ரெயில் நிலையம் அருகே உள்ள  தரைமட்ட பாலத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே தரைமட்ட பாலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க ரெயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-சங்கர், நாமக்கல்.

பள்ளிக்கு சாலை வசதி தேவை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி த.குளியனூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு செல்ல வழியின்றி ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வயல் வரப்பில் நடந்து செல்லும் அவலநிலை உள்ளது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே சாலை வசதி இல்லாத பள்ளிக்கூடத்துக்கு ரோடு அமைக்க அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர்மக்கள், த.குளியனூர், தர்மபுரி.

நோய் பரவும் அபாயம்
சேலம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் எம்.பெருமாபாளையம் ஊராட்சி அம்பேத்கர் நகர் காலனியில் சாக்கடை கால்வாய் இல்லாததால் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், எம்.பெருமாபாளையம், சேலம்.

மேலும் செய்திகள்