பட்டாசு எடுத்து செல்ல தடை: சேலம் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் போலீசார் சோதனை
பட்டாசு எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் சேலம் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
சேலம்
தடை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயிலில் பட்டாசு மற்றும் வெடிக்கும் பொருட்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தடையை மீறி ரெயிலில் யாரேனும் பட்டாசு எடுத்து செல்கிறார்களா? என்பதை ரெயில்வே போலீசார் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் பயணிகள் யாரேனும் பட்டாசு எடுத்து செல்கிறார்களா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று சேலம் வழியாக சென்னை, கோவை, கேரளா மற்றும் வடமாநிலங்களுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களில் போலீசார் ஏறி பட்டாசு கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்து கண்காணித்தனர்.
எச்சரிக்கை
மேலும், ரெயில் நிலையத்திற்கு வந்து சென்ற பயணிகளிடம், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களையோ? பட்டாசுகளையோ? எடுத்த செல்லக்கூடாது என்றும், தடையை மீறி எடுத்து செல்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரெயில்வே போலீசார் எச்சரிக்கை செய்தனர். மேலும், ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் போலீசார் வினியோகம் செய்தனர்.