மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
தென்தாமரைகுளத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியானார்கள். இதில் கன்றுக்குட்டியும் இறந்தது.
தென்தாமரைகுளம்,
தென்தாமரைகுளத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியானார்கள். இதில் கன்றுக்குட்டியும் இறந்தது.
இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
பால் வியாபாரி
தென்தாமரைகுளம் பள்ளிக்கூடம் ஜங்ஷனில் வசித்து வந்தவர் ஆல்பர்ட் மாணிக்கராஜ் (வயது 66). இவருக்கு சொர்ணசாந்தி (63) என்ற மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர். மூன்று மகன்களுக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள்.
இதனால் ஆல்பர்ட் மாணிக்கராஜ், மனைவியுடன் வசித்து வந்தார். அவர் தனது வீட்டின் அருகில் மாட்டு கொட்டகை அமைத்து அதில் பசுமாடுகளை வளர்த்து, பால் வியாபாரம் செய்து வந்தார்.
மாட்டு கொட்டகை சேதம்
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், மாட்டுக் கொட்டகையில் சேதம் ஏற்பட்டு, மழைநீர் வீட்டினுள் விழத் தொடங்கியது. இதனால் அதை சரி செய்ய ஆல்பர்ட் மாணிக்கராஜ் முடிவு செய்தார்.
அதற்காக தென்தாமரைகுளம் பால்பண்ணை தெருவைச் சேர்ந்த பகவதியப்பன் (65) என்பவரை வேலைக்கு அழைத்தார். அதன்படி அவரும், ஆல்பர்ட் மாணிக்கராஜ் வீட்டுக்கு வந்து மாட்டுக் கொட்டகையில் இரும்பு ஏணி வைத்து மேலே ஏற தொடங்கினார்.
2 பேர் பலி
அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் நிலைகுலைந்த பகவதியப்பனின் அலறல் சத்தம் கேட்டு ஆல்பர்ட் மாணிக்கராஜ் ஓடிவந்து அவரை தாங்கி பிடித்தார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதனால் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த கன்றுக்குட்டி மீது விழுந்தனர். இதனால் கன்றுகுட்டியின் மீதும் மின்சாரம் பாய்ந்தது. சம்பவ இடத்திலேயே 2 பேரும் பலியானார்கள். கன்றுகுட்டியும் இறந்தது.
அதிகாரி விசாரணை
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், அப்பகுதி மக்கள் ஆல்பர்ட் மாணிக்கராஜ் வீட்டு முன்பு கூட தொடங்கினர். உடனடியாக கொட்டாரத்தில் உள்ள மின்வாரிய அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மின் நிலைய ஊழியர்களும் விரைந்து வந்து மின் கம்பத்தில் இருந்து ஆல்பர்ட் மாணிக்கராஜ் வீட்டுக்கு சென்ற மின் இணைப்பை துண்டித்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு தென்தாமரைகுளம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.
மின் கசிவு
அப்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், மின் கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் மாட்டுக் கொட்டகையிலும் மின்கசிவு ஏற்பட்டு, இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த வீட்டுக்கு வந்த போலீசார், பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலியான பகவதியப்பனுக்கு ராஜம் (58) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பலியான தொழிலாளிகளின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை நெகிழச் செய்வதாக இருந்தது.
மின்சாரம் தாக்கி 2 பேர் பலியானதும், ஒரு கன்றுகுட்டி இறந்ததும் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.