2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு மினிலாரியில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேனி :
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க எல்லைப்பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று, உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையில் கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி, சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா மற்றும் போலீசார் லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் வழிபடும் முருகன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கூடலூரில் இருந்து கேரள மாநிலம் குமுளி நோக்கி சென்ற ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த மினி லாரியில் இருந்த மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. மினி லாரி டிரைவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் கூடலூரை சேர்ந்த பாஸ்கரன் மகன் சத்திரியன் (வயது 38) என்றும், கேரளாவுக்கு 2 டன் ரேஷன் அரிசி கடத்தி செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பறிமுதல் செய்த ரேஷன் அரிசி, மினி லாரி ஆகியவற்றை உத்தமபாளையம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.