2 வீடுகளில் நகை-பணம் திருட்டு
விழுப்புரத்தில் 2 வீடுகளில் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மா்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் பானாம்பட்டு சாலை பகுதியை சேர்ந்தவர் மணி மகன் சிவக்குமார் (வயது 41), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது நேற்று அதிகாலை 2.30 மணியளவில் யாரோ மர்ம நபர்கள், சிவக்குமார் வீட்டின் பின்பக்க கதவு தாழ்பாளை நெம்பி திறந்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோவை நைசாக உடைத்து அதிலிருந்த 3¼ பவுன் நகை, ரு.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர். காலை 5 மணியளவில் சிவக்குமார் எழுந்து பார்த்தபோது நகை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
வலைவீச்சு
மேலும் அதே பகுதியில் கங்காதரன் (70) என்பவரது வீட்டில் ரூ.97 ஆயிரம் ரொக்கம், 83 கிராம் வௌ்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இது தவிர அதே பகுதியில் உள்ள சிவசங்கரன் (41), மேனுவேல் (75) ஆகியோர் வீட்டின் பின்பக்க கதவை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அந்த சமயத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் எழுந்ததால் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதனால் அந்த 2 வீடுகளிலும் நகை, பணம் எதுவும் திருடுபோக போகவில்லை.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுபற்றி சிவக்குமார் உள்ளிட்ட 4 பேரும் தனித்தனியாக அளித்த புகார்களின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.