கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ் பறிமுதல்
தீபாவளி பண்டிகையையொட்டி ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்வதற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம்,
தீபாவளி பண்டிகையையொட்டி ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்வதற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
கூடுதல் பஸ்கள்
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்களின் ஊர்களுக்கு சென்றுவருவதற்காக அரசின் சார்பில் இந்த ஆண்டு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் செல்வதற்கு அவதிப்படாமல் இருக்கும் வகையில் தேவைக்கு கேற்ப அந்தந்த பகுதிகளுக்கு தேவையான பஸ்களை இயக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேநேரத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி சில ஆம்னி பஸ்களில் கூட்டத்தை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், இருக்கைகளை மறைத்து கடைசி நேரத்தில் அதிக கட்டணத்திற்கு விற்பனை செய்வதை தடுக்கவும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தர விட்டுஉள்ளார்.
தொடர் சோதனை
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்லும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் ஆம்னி பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூலித்ததும், விதிகளை மீறியதும் ஆய்வில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த ஆம்னி பஸ்சை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நடவடிக்கை
இந்த சோதனை தீபாவளி முடிந்த பின்னரும் விழாவிற்கு வந்தவர்கள் திரும்பி செல்லும்போது இதுபோன்ற கூடுதல் கட்டண வசூல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.