கடலாடி தொழிலதிபரிடம் ரூ.2½ லட்சம் மோசடி

கார் விற்பதாக முகநூலில் விளம்பரம் செய்து கடலாடி தொழில் அபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்.

Update: 2021-11-03 13:06 GMT
ராமநாதபுரம், 
கார் விற்பதாக முகநூலில் விளம்பரம் செய்து கடலாடி தொழில் அபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்.
முகநூல்
கடலாடி அருகே உள்ள கொண்டு நல்லான்பட்டி பகுதியை சேர்ந்தஅழகுசுந்தரம் மகன் ஜெகதீஸ்வரன் (வயது34). இவர் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி சரக்கு வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். தொழில் அதிபரான இவர் தனது முகநூல் பக்கத்தில் பார்த்து கொண்டிருந்தபோது கார் ஓனர் என்ற விளம்பரத்தில் 2005 மாடல் திருப்பூர் பதிவெண் கொண்ட இன்னோவா கார் விற்பனைக்கு என்றும் விலை ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் என்றும் அறிவித்திருந்ததை கண்டார். 
கார் வாங்க வேண்டும் என்று காத்திருந்த ஜெகதீஸ்வரன் விலை குறைவாக இருப்பதால் வாங்கலாம் என்று எண்ணி அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டார். மறுமுனையில் பேசிய நபர் தான் சாசி பிரகாஷ் அகர்வால் என்றும் பெங்களூருவில் ராணுவ அதிகாரியாக பணிபுரிந்து வருவதாகவும் தனது சொந்த ஊர் திருப்பூர் என்றும் தெரிவித்துள்ளார். 
விதிமுறை
கார் குறித்து கேட்டபோது நல்ல நிலையில் உள்ளதாகவும் தனக்கு பிடித்த நபருக்குதான் அந்த காரை கொடுக்க வேண்டும் என்று உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனை கேட்ட ஜெகதீஸ்வரன் தான் அந்த காரை வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். உங்களை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது உங்களுக்கே அந்த காரை தருகிறேன். ஆனால் தற்போது அந்த கார் ராணுவ அலுவலகத்தில் உள்ளதால் அந்த காரை பெறுவதில் நடைமுறைகளை பின்பற்றினால்தான் வாங்க முடியும் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட ஜெகதீஸ்வரன் விதிமுறைகளை பின்பற்றி வாங்கி கொள்வதாக தெரிவித்துள்ளார். 
இதனை தொடர்ந்து அந்த மர்ம நபர் தெரிவித்தபடி பல்வேறு தவணைகளில் சாலை வரி, விற்பனை வரி, ஜி.எஸ்.டி. வரி என பல்வேறு வரிகளை கூறி ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 80 பெற்றுக்கொண்டார். அவர் கேட்டபடி அனைத்து பணத்தினையும் செலுத்திய பின்னர் கார் குறித்து கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை என்றும் தொடர்ந்து பல காரணங்களை கூறி பணம் அனுப்புமாறு கூறியதால் ஜெகதீஸ்வரன் ஒரு கட்டத்தில் தனக்கு காரே தேவையில்லை என்றும் தனது பணத்தினை திருப்பிதந்து விடுமாறும் கூறியுள்ளார். 
ஏமாற்றம்
ஜெகதீஸ்வரன் சுதாரித்து கொண்டதை உணர்ந்த மர்ம நபர் அதன்பின்னர் அவர் தொடர்பு கொள்ள முடியாதபடி செல் போன் எண்ணை அணைத்துவிட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெகதீஸ்வரன் இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவிற்கு ஆன்லைனில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் ராமநாத புரம் சைபர்கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்