கிருஷ்ணாபுரம் அணை தண்ணீர் திறப்பு: தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின; பொதுமக்கள் அவதி
கிருஷ்ணாபுரம் அணை தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
பள்ளிப்பட்டு,
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அம்மபள்ளி என்ற இடத்தில் கிருஷ்ணாபுரம் அணை உள்ளது. இந்த அணை உள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணாபுரம் அணை முழு கொள்ளளவை எட்டியது. மேலும் அணைக்கு அதிக அளவில் நீர்வரத்து இருந்ததால் அணையின் கதவுகளை திறந்து தண்ணீரை வெளியேற்ற ஆந்திர மாநில நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இது குறித்து தமிழக வருவாய்த்துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பின் ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில், திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா ஆலோசனையின் பேரில் கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாயம் குறித்து தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது. மேலும் தரைப்பாலங்களை இரவு நேரத்தில் யாரும் கடக்க வேண்டாம் என்று அவர்கள் எச்சரிக்கை செய்தனர்.
கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அணையின் இரு கதவுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் பாய்ந்தது. இந்த வெள்ளம் பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் நேற்று அதிகாலை 3 மணியளவில் வந்து சேர்ந்தது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள கீழ் கால் பட்டடை, சாமந்த வாடா, நெடியம், சொரக்காய் பேட்டை போன்ற பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றில் உள்ள தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின.
இந்த தரைப்பாலங்களுக்கு மேல் சுமார் 5 அடி உயரத்திற்கு அணை நீர் பாய்ந்தது. இதனால் இந்த ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பள்ளிப்பட்டு நகருக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அதேசமயம் ஆற்றில் வெள்ளம் வருவதையொட்டி வருவாய்த்துறையினரும், போலீசாரும் இரவு முழுவதும் தரைப்பாலங்களுக்கு இருபுறமும் யாரும் ஆற்றில் இறங்கி விடாமல் பார்த்துகொண்டனர்.