இலங்கை தமிழர்களுக்கு தி.மு.க. அரசு எப்போதும் துணை நிற்கும். வேலூரில் மு.க. ஸ்டாலின் பேச்சு
இலங்கை தமிழர்களுக்கு தி.மு.க. அரசு எப்போதும் துணை நிற்கும் என்று வேலூரில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
வேலூர்
இலங்கை தமிழர்களுக்கு தி.மு.க. அரசு எப்போதும் துணை நிற்கும் என்று வேலூரில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
குடியிருப்புகள் கட்டும் திட்ட தொடக்க விழா
தமிழக அரசின் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் இலங்கை தமிழர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் திட்ட தொடக்க விழா மற்றும் வேலூரை அடுத்த மேல்மொணவூரில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் நேற்று நடந்தது.
விழாவுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார். கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், வேலூர் எம்.பி. டி.எம்.கதிர் ஆனந்த், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ.வும், வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வரவேற்றார்.
விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு முதற்கட்டமாக ரூ.142 கோடியே 16 லட்சம் மதிப்பில் 3,510 புதிய குடியிருப்பு கட்டும் திட்டம் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.30 கோடியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்கான பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள்
இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் நலத்திட்டங்களை செய்திருந்தாலும் 6-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றிருக்கக்கூடிய தி.மு.க. அரசு சார்பில் பல நல்ல திட்டங்களை உருவாக்கி அவற்றின் தொடக்க மற்றும் அடிக்கல் நாட்டும் விழா சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த விழாவில் நானும் பங்கேற்று, உங்கள் அனைவரையும் சந்திக்கக்கூடிய வாய்ப்பை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். பெருமைப்படுகிறேன். புலம் பெயர்ந்து தாய் தமிழ்நாட்டிற்கு வந்து இலங்கை தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு அடையாளத்திற்காகத் தான் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் என்று அழைக்கிறேன். தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும், எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அனைவரும் ஒரு தாய் மக்கள் தான். அந்த அடிப்படையில் தமிழக தமிழர்களும், இலங்கை தமிழர்களும் இனத்தால், மொழியால், பண்பாட்டால், நாகரீகத்தால் ஒன்று பட்டவர்கள். நாம் அனைவரும் தமிழ்இனத்தை சேர்ந்தவர்கள். கடல்தான் நம்மை பிரிக்கிறது. நீங்கள் விட்ட கண்ணீர் நம்மை இன்று நனைத்து கொண்டிருக்கிறது. இலங்கை தமிழர்கள் தங்களின் தாயகத்தில் பாதிக்கப்பட்ட காலம் முதல் அவர்களுக்காக குரல் கொடுத்து வரும் இயக்கம் தி.மு.க.
கடந்த 1983-ம் ஆண்டு முதல் ஈழத்தில் இருந்து தமிழர்கள் இங்கு வரத்தொடங்கினர். அவர்களுக்காக முகாம்கள் அமைக்கப்பட்டன. சிலர் வெளியே தங்கினார்கள். முகாம்களின் நிலைமை மிக மோசமாக இருந்தது. இதனை உணர்ந்து 1997-ம் ஆண்டு மு.கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தினார். அதன்மூலம் இலங்கை தமிழர்கள் ஓரளவுக்கு தன்னிறைவு அடைந்தார்கள்.
அகதிகள் அனாதைகள் அல்ல
ஆனால் கடந்த 10 ஆண்டு காலத்தில் அ.தி.மு.க. அரசு இலங்கை தமிழர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. அவர்களை பற்றி கவலையும் படவில்லை. தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் இலங்கை தமிழர்களுக்கு நல்வாழ்வு திட்டங்களை மீண்டும் தொடங்கியிருக்கிறோம். அவர்கள் அகதிகள் அல்ல. அனாதைகள் அல்ல. அவர்களுக்கு நாம் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காக அகதிகள் முகாம் என்று அழைக்க கூடாது என கூறினேன். மேலும் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று அழைப்போம் என்று அறிவித்தேன். அதனை செயல்படுத்தும் நாள் தான் இந்த நாள்.
முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்தபோது இலங்கை தமிழர்களுக்கு 1997-98-ம் ஆண்டு 3 ஆயிரத்து 594 புதிய வீடுகளும், 1998-99-ம் ஆண்டில் 3 ஆயிரத்து 826 வீடுகளும் கட்டித்தரப்பட்டன. கடந்த 2009-ம் ஆண்டு போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தது. தற்போது மேலும் அவர்களின் வாழ்விடங்களை மேம்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். எனவே ஆட்சி பொறுப்பேற்றவுடன் 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களையும் அனைத்து அமைச்சர்களும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். அங்கு வசிப்பவர்களுக்கு என்ன உடனடி தேவை என்பது குறித்து அறிக்கை தர வேண்டும் என்று தெரிவித்தேன். அதன்அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது.
தி.மு.க. அரசு துணை நிற்கும்
19 ஆயிரத்து 46 குடும்பங்களை கொண்ட இலங்கை தமிழர்கள் முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7,469 வீடுகள் கட்டித்தரவும், அனைத்து முகாம்களிலும் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கிடவும், அவற்றை மேம்படுத்தவும் இலங்கை தமிழர் மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தேன். முகாம்வாழ் குழந்தைகளின் கல்வி மேம்பட பொறியியல், வேளாண், வேளாண் பொறியியல் மற்றும் முதுகலை படிப்பு படிக்கும் மாணவர்களின் அனைத்து கல்வி, விடுதி கட்டணத்தை அரசே முழுமையாக ஏற்று கொள்ளும். கலை, அறிவியல் மற்றும் பட்டயப்படிப்பு படிப்பவர்களுக்கு உயர்த்தப்பட்ட கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அவர்களுக்கு வேலைவாய்ப்பு தகுதிகளை மேம்படுத்த திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல், முகாம்களில் இயங்கி வரும் சுயஉதவிக்குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாத மாதாந்திர பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும். அலுமினிய பாத்திரங்களுக்கு பதிலாக சில்வர் பாத்திரங்கள் வழங்கப்படும். கோ-ஆப்டெக்ஸ் மூலம் தரமான ஆடைகள் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படும்.
இலங்கை தமிழர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி மற்றும் உபகரணங்கள் வழங்குதல், இலவச அரிசி வழங்குதல் உள்ளிட்ட 12 புதிய திட்டங்களை மேல்மொணவூரில் தொடங்கி வைத்துள்ளேன். இது முடிவல்ல. மீதமுள்ள 105 முகாம்களிலும் பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார்கள். இலங்கை தமிழர்களுக்காக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் ஆதரவற்றவர்கள் அல்ல. என்னை உங்களின் உடன் பிறப்பாக நினைத்து கொள்ளுங்கள். ஒரு ஜன்னலை மூடினால், இன்னொரு ஜன்னல் திறக்கும். இலங்கை தமிழர்களுக்காக தி.மு.க. அரசு கதவை திறந்து வைத்துள்ளது. இலங்கை தமிழர்களுக்காக தி.மு.க. அரசு எப்போதும் துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறேன். இலங்கை தமிழர்களுக்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கு நாங்கள் என்றைக்கும் துணை நிற்போம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.