சேலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழக பெருவிழா: சீமான் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சேலத்தில் தமிழக பெருவிழா நடத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சேலம்
தமிழ்நாடு தினம்
சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு தினம், தமிழக பெருவிழா ஆகியவை நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
இந்த விழாவில் அவர் தமிழ்நாட்டுக்கான கொடி என்று கூறி அங்கு ஒரு கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அம்மாபேட்டை ரூரல் கிராம நிர்வாக அலுவலர் ராஜா (வயது 38) என்பவர் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த விழாவில் விதிமுறைகளை மீறியதாக புகார் ஒன்று கொடுத்தார்.
6 பிரிவுகளில் வழக்கு
அதன்பேரில் சீமான் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுதல், கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்காதது உள்பட 6 பிரிவுகளின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, விழாவில் தமிழ்நாடு கொடி என கூறி ஒரு கொடியை சீமான் ஏற்றினார். இது தமிழக மக்களிடையே மொழி வாரியான பிரிவினையை ஏற்படுத்துகிறது. மேலும் அரசுக்கு எதிராக தவறான கருத்துகளை பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.