மல்லூர் அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
மல்லூர் அருகே 2 கோவில்களின் உண்டியலை உடைத்து பணம், நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பனமரத்துப்பட்டி,
கோவிலில் திருட்டு
மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கிராமம் கோட்டை கரடு பகுதியில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் பணம், நகை உள்ளிட்டவற்றை காணிக்கையாக போட்டுவிட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் துர்க்கையம்மன் கருவறைக்கு அருகில் இருந்த கன்னிமார் சிலையின் கருவறை பூட்டை உடைத்துள்ளனர். மேலும் கட்டிங் மெஷின் மூலம் உண்டியலை ஓட்டை போட்டு அதில் இருந்த பணம் மற்றும் நகையை திருடிச் சென்றுள்ளனர்.
மற்றொரு கோவில்
இதனிடையே நேற்று காலை கோவிலுக்கு வந்த பணியாளர்கள் கோவில் பூட்டு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும், மல்லூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் துறை போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகைகளை பதிவு செய்து ஆய்வு செய்தனர்.
இதேபோல் மல்லூர் சந்தியூர் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சிங்காரத்தோப்பு பகுதியில் முனியப்பன் கோவிலில் உள்ள உண்டியலையும், மர்ம நபர்கள் சிலர் உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வலைவீச்சு
மேலும் மல்லூர் அருகே அடுத்தடுத்து 2 கோவில்களின் உண்டியலை உடைத்து பணம், நகை உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை சேலம் ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.