பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரை அடுத்த மலையப்பநகர் பிரிவு பாதை அருகே கோயமுத்தூரில் இருந்து தனியார் டயர் தொழிற்சாலைக்கு ஒரு லாரி செல்ல யூ வளைவில் திரும்பி நின்றது. அப்போது சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற பார்சல் சேவை லாரியும், பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மினி வேனும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயன்றபோது பார்சல் சேவை லாரியும், மினி வேனும் மோதிக் கொண்டன. இதனை அடுத்து யூ வளைவில் நின்ற கோவை லாரி மீது பார்சல் லாரியும் மினிவேனும் மோதின.
2 பேர் பலி
இந்த விபத்தில் மினிவேன் கவிழ்ந்து நொறுங்கியது. 2 லாரிகளின் முன்புறம் சேதம் அடைந்தது. இதில் வேன் டிரைவர் பெரம்பலூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த ஜெயராமன் (வயது 43), வேனில் உட்கார்ந்திருந்த சித்தளியை சேர்ந்த நாராயணசாமி மனைவி நல்லம்மாள் (56), தொண்டமாந்துறை அருகே உள்ள விஜயபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மனைவி லதா (45) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். ஜெயராமின் மனைவி உமா (32) காயமின்றி உயிர் தப்பினார். படுகாயம் அடைந்த 3 பேரும் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி நல்லம்மாள், லதா இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து உமா கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.