தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-11-02 18:53 GMT
திருச்சி
வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் சாலை 
அரியலூர் மாவட்டம், வள்ளக்குளம் கிராமத்தில் ஏலக்குறிச்சியில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைபெய்யும்போது சாலை முழுவதும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் பஸ், லாரி, மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மழைநீர் வடிந்த பின்னரே செல்ல வேண்டி உள்ளது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் இல்லை எனில் மழைநீர் செல்லும் வகையில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பொதுமக்கள், வள்ளக்குளம், அரியலூர்.

நாய்கள் தொல்லையால் குழந்தைகள் அச்சம் 
பெரம்பலூரில் உள்ள ரோவர் வளைவில் இருந்து எலம்பலூர் செல்லும் சாலையில் முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பகுதியில்  ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் பெரிதும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். ஆங்காங்கே தெருநாய்கள் குழந்தைகளை கடித்து வரும் நிலையில் பெற்றோர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
கோகுல், பெரம்பலூர். 

சேறும், சகதியுமான சாலையால் பொதுமக்கள் அவதி 
திருச்சி கிழக்கு தொகுதி 37-வது வார்டு ஏர்போர்ட் மருவூர் அரசி நகர் மண் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளது. மழையால் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும், நடந்து செல்லும் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் அவதி அடைந்து வருகின்றனர். முதியவர்கள் இந்த சாலையில் நடந்து செல்ல முடியாமல் கீழே விழுந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து,  தற்காலிகமாக சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மருவூர், திருச்சி. 

குடிநீர் பற்றாக்குறை 
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கொடியாலம் ஊராட்சியில் 1, 2, 3, 4 ஆகிய வார்டுகளில் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் ஆழ்துளை கிணறு மூலம் குடிதண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.  இதனால் மக்கள் கொடியாலம் ரெயில்வே கேட் பகுதியில் உள்ள காவிரி குடிநீர் பைப்பிற்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் பிடிப்பதால் அலுவலகத்திற்கு செல்பவர் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் மக்களின் கோரிக்கையான தண்ணீர் பற்றாக்குறையை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள்,  கொடியாலம், திருச்சி.

ஆபத்தான  நிலையில் மின்கம்பங்கள் 
திருச்சி 45வது வார்டு காமராஜபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. மேலும் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
இலக்கியா, காமராஜபுரம், திருச்சி. 
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, ஒலியமங்கலம் ஊராட்சி மணவயல் விவசாய நிலங்களில் மிகவும் ஆபத்தான நிலையில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் மின்கம்பம் எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள்,  மணவயல், புதுக்கோட்டை.

சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள் 
கரூர் மாவட்டம், க.பரமத்தி ராஜபுரம் சாலை, கிராம சேவை மைய கட்டிடம் அருகில் அப்பகுதியில்  உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்படுகின்றன.  இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடாக காட்சி அளிக்கிறது. மேலும் மழைபெய்யும்போது அதில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் அவற்றில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், க.பரமத்தி, கரூர். 

கோவில் சுவரில் விரிசல்
திருச்சி கீழரண் சாலையில்  உள்ள செல்வ விநாயகர் கோவிலின் சுவர் விரிசல் அடைந்துள்ளது. பக்தர்கள் நடமாட்டத்தின்போது இந்த சுவர் விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சுவாமிநாதன், திருச்சி. 

டெங்கு காய்ச்சல்  பரவும் அபாயம் 
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் இப்பகுதியில் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அண்ணா நகர், திருச்சி. 

எரியாத தெருவிளக்கு
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பஸ்  நிலையம் ரெங்கநகரில் கடந்த ஒரு மாதமாக தெரு விளக்கு எரியவில்லை. இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஸ்ரீரங்கம், திருச்சி. 

பாலத்தில் பள்ளம்; வாகன ஓட்டிகள் அவதி 
திருச்சி மாநகரம் அரியமங்கலம் கோட்டம் 21வது வார்டு வரகனேரி தஞ்சாவூர் ரோடு சூலக்கரை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள இரட்டை வாய்க்கால் பாலம் கடந்த  ஆகஸ்டு  மாதம் புதுப்பிக்கப்பட்டது. தற்போது இந்த பாலத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.  இதனால் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிக சிரமமாக உள்ளது.  தற்போது பள்ளம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் வாகனங்கள் அதில் மோதி விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
மணிகண்டன், வரகனேரி, திருச்சி.

கோவில் நிலத்தில் கழிவுநீர்  ஊற்றப்படுவதை தடுக்க கோரிக்கை
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், காட்டுகுளம் ஊராட்சியை சேர்ந்த  இந்து அறநிலைய  துறைக்கு சொந்தமான திருவெள்ளறை ஸ்ரீ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான  நிலத்தில்  கரும்பு  ஆலை கழிவு நீரை ஊற்றுகின்றனர். மேலும் சத்திரப்பட்டி  பகுதியில் உள்ள கோவில் நிலத்தின் அருகே கோனான்  குட்டை உள்ளது. மழை பெய்தால்  மழைநீரை சேகரிப்பதற்காக வெட்டப்பட்ட இந்த குட்டையில் மழைநீர் அதிக நாட்களாக தேங்கி இருப்பதால் இப்பகுதியில் மேயும் ஆடு, மாடுகள் தண்ணீர் குடிக்கும். இந்த குட்டையில் சில நாட்களுக்கு முன்பு யாரோ கரும்பு ஆலை கழிவுநீரை கொண்டுவந்து ஊற்றி விட்டனர்.  இந்த  குட்டையில் உள்ள தண்ணீரில்  கரும்பு ஆலை கழிவு நீர் கலந்துவிட்டது. கலந்தது தெரியாமல்  இந்த பகுதியில் ஆடு, மாடுகள் எப்போதும்போல குட்டையில் இருப்பது தண்ணீர்தான் என்று  குடித்து விட்டது. இதனால் மூன்று ஆடுகள் இறந்து விட்டதாக கூறுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், காட்டுகுளம், திருச்சி. 

மேலும் செய்திகள்