‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டி

Update: 2021-11-02 17:41 GMT
நாய்கள் தொல்லை 
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் ஊராட்சியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் நாய்கள் சாலைகளில் சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. மேலும் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே, நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 
பாரூக்உசேன், பனைக்குளம். 
பயணிகள் அவதி 
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து எதிர்க்கோட்டை வழியாக ஆலங்குளம் செல்லும் அரசு பஸ் பழுதடைந்த நிலையில் உள்ளது. மேற்கூரை ஓட்டையாக இருப்பதால் மழைக்காலத்தில் தண்ணீர் வடிகிறது. இதன் காரணமாக பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? 
சிவா, மதுரை. 
குண்டும், குழியுமான சாலை 
மதுரை கோவலன் நகரில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் பொதுமக்களும் அவதியடைகின்றனர். எனவே, இப்பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும். 
மோகன், மதுரை. 
தேங்கி நிற்கும் மழைநீர் 
ராமநாதபுரம் கேணிக்கரையில் பஸ் நிறுத்தம் அருகில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக இங்கு வரும் மாணவ, மாணவிகளும், பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து கொசுக்களும் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும். 
ராஜா முகம்மது, கேணிக்கரை. 
அடிப்படை வசதிகள் தேவை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா ராஜகோபாலபுரம் கணபதி நகர், ராஜலட்சுமி நகரில் சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. இதன் காரணமாக இங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
பொதுமக்கள், ஸ்ரீவில்லிபுத்தூர். 
ஆபத்தான மின்கம்பங்கள் 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நவணிக்களத்தில் உள்ள மின்கம்பங்கள் சில சேதமடைந்த நிலையில் உள்ளன. அவை எப்போது சாய்ந்து விழும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பாக ஆபத்தான மின்கம்பங்களை அகற்ற வேண்டும். 
பாண்டியன், நவணிக்களம்.
சுகாதார சீர்கேடு 
விருதுநகர் மாவட்டம் செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில் சாரதாநகர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஹரிஹரன் சங்கர், சிவகாசி. 
பொதுமக்கள் அவதி 
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோகுல்நகர் கிராமத்தில் சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் இங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்களின் நலன்கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
முருகவேல், கோகுல்நகர்.

மேலும் செய்திகள்