மரக்காணத்தில் 20 செ.மீ. பதிவானது
விழுப்புரம் மாவட்டத்தில் விடிய, விடிய அடைமழை பெய்தது. அதிகபட்சமாக மரக்காணத்தில் 20 செ.மீ. பதிவானது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக அடைமழை பெய்து வருகிறது. இதனால் மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு நேற்று பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காணிமேடு- மண்டகப்பட்டு இடையே உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் சென்றது. இதனால் சுற்றுவட்டார 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து தடைபட்டது.
மரக்காணம் அருகே கொள்ளுமேட்டில் உள்ள இருளர் குடியிருப்புகளை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள 7 குடிசை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வீட்டின் பெரும்பகுதி இடிந்து விழுந்தது. இதனால் அங்குள்ள மக்கள், உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் மரக்காணம் பகுதியில் உள்ள உப்பளங்களில் மழைநீர் தேங்கி ஏரிபோல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், செஞ்சி, மேல்மலையனூர், வானூர், கோட்டக்குப்பம், மயிலம், கூட்டேரிப்பட்டு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மரக்காணத்தில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.