சிறப்பு டிஜிபி போலீஸ் சூப்பிரண்டு 8ந்தேதி ஆஜராக வேண்டும்
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தொடர்ந்த பாலியல் வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய இருப்பதால் சிறப்பு டி.ஜி.பி., முன்னாள் எஸ்.பி. ஆகிய இருவரும் வருகிற 8-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம்,
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இவ்வழக்கு விசாரணையின்போது சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் ஆஜரான வக்கீல் ரவீந்திரன், இவ்வழக்கு தொடர்பாக தடயவியல் அறிக்கை, சி.சி.டி.வி. காட்சிகள், விடுபட்ட ஆவணங்களை அரசு தரப்பில் எங்களுக்கு பென்டிரைவ் மூலம் வழங்கும்படி வாதிட்டார். அதனை வழங்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு ஒரு நாள் அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட அப்போதைய போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி இருவரும் ஆஜராகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்தனர்.
மேலும் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் ரவீந்திரன், நாங்கள் கேட்டுக்கொண்டபடி ஆவணங்கள் அடங்கிய பென்டிரைவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் எங்களுக்கு வழங்கியதை பெற்றுக்கொண்டோம் என்று கூறி அதற்கான மனுவை கோர்ட்டில் சமர்பித்தார். அதனை நீதிபதி கோபிநாதன் ஏற்றுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன், இதன் வழக்கு விசாரணையை வருகிற 8-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளை பதிவு செய்யப்பட உள்ளதால் சிறப்பு டி.ஜி.பி.யும், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
===