குழந்தைகளை ஆண், பெண் வேறுபாடு பார்க்காமல் சமமாக வளர்க்க வேண்டும்-சமுதாய வளைகாப்பு விழாவில் கலெக்டர் திவ்யதர்சினி பேச்சு
குழந்தைகளை ஆண், பெண் என வேறுபாடு பார்க்காமல் சமமாக பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்று தர்மபுரி அருகே நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கலெக்டர் திவ்யதர்சினி பேசினார்.
தர்மபுரி:
குழந்தைகளை ஆண், பெண் என வேறுபாடு பார்க்காமல் சமமாக பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்று தர்மபுரி அருகே நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கலெக்டர் திவ்யதர்சினி பேசினார்.
சமுதாய வளைகாப்பு
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா தூதரையன் கொட்டாய் கிராமத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். செந்தில்குமார் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜான்சிராணி வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 330 கர்ப்பிணிகளுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை பாக்கு, மலர்மாலை, பழம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களுடன் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. பின்னர் அவர்களுக்கு தக்காளி சாதம், புளி சாதம், கொத்தமல்லி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட கலவை சாதங்களுடன் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
வேறுபாடு பார்க்கக்கூடாது
விழாவில் கலெக்டர் திவ்யதர்சினி பேசியதாவது:-
கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க தமிழக அரசு தலா ரூ.18 ஆயிரம் தொகையை பல்வேறு தவணைகளில் வழங்கி வருகிறது. இவர்களுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் மாத்திரைகள், இரும்பு சத்து மாத்திரைகள் அரசின் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகளின் உடல் ஆரோக்கியம், மன மகிழ்ச்சி ஆகியவற்றை மேம்படுத்த நமது கலாசார முறைப்படி ஏற்றத்தாழ்வற்ற, அனைவருக்கும் சமமான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
கர்ப்பிணி தாய்மார்கள் சத்தான உணவை சாப்பிடுவதுடன் உடல் நலனை பாதுகாத்து கொள்ள வேண்டும். அவர்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் மன மகிழ்ச்சியுடன் இருந்தால் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியும், ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். ஆண், பெண் என வேறுபாடு பார்க்காமல் அனைத்து குழந்தைகளையும் சமமாக பாதுகாத்து வளர்க்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார். விழாவில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுகந்தபிரியா நன்றி கூறினார்.