தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகார் பெட்டி செய்தி எதிரொலி;
கொசு மருந்து புகை அடிக்கப்பட்டது
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் முதலியார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அம்ஜத். இவர் முதலியார்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட காந்திநகரில் கொசு தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் இரவில் பொதுமக்கள், குழந்தைகள் தூங்கமுடியாமல் அவதிப்படுவதால், கொசு மருந்து புகை அடிக்க வேண்டும் என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக சுகாதார பணியாளர்கள் அந்த பகுதியில் கொசு மருந்து புகை அடித்தனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.
சாலையில் தேங்கி கிடக்கும் தண்ணீர்
நெல்லை மேலப்பாளையம் மண்டலம் 28-வது வார்டு சேவியர் காலனியில் சாலை மோசமாக காணப்படுகிறது. தற்போது பெய்து வரும் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. அங்குள்ள அந்தோணியார் ஆலயத்திற்கு தெற்கு பகுதியிலும் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. எனவே, சாலையை சீரமைக்கவும், தண்ணீர் தேங்காத வகையிலும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜயராஜா, சேவியர் காலனி.
மோசமான சாலை
மேலப்பாளையம் மண்டலம் 38-வது வார்டு கருப்பந்துறை வழியாக விளாகம் செல்லும் சாலை மிகவும் மோசமாகவும், நடுவில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஓடை பகுதியில் பெரிய பள்ளமும் உள்ளது. இதனால் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ மற்றும் பல்வேறு வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. உடனடியாக இதை மாவட்ட நிர்வாகம் சரிசெய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சுரேஷ், வடக்கு விளாகம்.
புகார் பெட்டி செய்திக்கு தீர்வு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம் இடைகால் பள்ளிவாசல் நான்குமுனை சந்திப்பில் கடந்த 1 மாதமாக உயர்கோபுர மின்விளக்கு எரியவில்லை. இதுகுறித்து சிவராமபேட்டையைச் சேர்ந்த சீனிவாசகன் ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்குகளை சரிசெய்து எரியவைத்து உள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.
சுகாதார கேடு
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் பெரிய கிராமம் நடுத்தெருவில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, சுகாதார கேடு ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
கணேசன், கீழக்கலங்கல்.
கால்வாய் தூர்வாரப்படுமா?
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் டி.பி.ரோடு முதல் நகர பஞ்சாயத்து அலுவலகம் வழியாக செல்லும் கால்வாய் தூர்வாரப்படாததால் குப்பைகள் நிரம்பி முட்செடிகள் வளர்ந்து கழிவுநீர் தேங்குகிறது. மழை காலம் தொடங்கி விட்டதால் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இந்த கால்வாயை முற்றிலும் தூர்வார சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
கணேசன், திருச்செந்தூர்.
சாலையை சரிசெய்ய வேண்டும்
கோவில்பட்டி நகராட்சி 14-வது வார்டு ஆழ்வார் தெரு, காளியப்பன் தெரு, செல்லப்பாண்டியன் தெரு, முத்தம்மாள் தெரு ஆகியவற்றில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சரிசெய்ய வேண்டுகிறேன்.
நேதாஜி பாலமுருகன், கோவில்பட்டி.