கோடநாடு வழக்கில் கனகராஜின் உறவினர் ரமேஷ் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்

கோடநாடு வழக்கில் கனகராஜின் உறவினர் ரமேஷ் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்

Update: 2021-11-02 14:50 GMT
ஊட்டி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜின் உறவினர் ரமேசை ஊட்டி மகளிர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். மீண்டும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

கோடநாடு வழக்கு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.

 மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ் சாமி, மனோஜ்சாமி, ஜித்தின்ஜாய், உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். 

இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முழு விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சம்பவம் நடந்த சில நாட்களில் விபத்தில் கனகராஜ் (ஜெயலலிதா கார் டிரைவர்) இறந்தது, கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டர் தற்கொலை செய்தது ஆகிய 2 வழக்குகள் யதார்த்தமாக நடந்ததா அல்லது ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

 தொடர் விசாரணை அடிப்படையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால், நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

5 நாள் அனுமதி

கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்ட இருவரையும் தனித்தனியாக சோலூர்மட்டம் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 28-ந் தேதி தனபால், 29-ந் தேதி ரமேஷ் ஆகிய 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஊட்டி கோர்ட்டு அனுமதி வழங்கியது. 

இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து பல்வேறு கேள்விகளை கேட்டு முக்கிய தகவல்களை போலீசார் பதிவு செய்து வருகின்றனர். 5 நாள் காவல் முடிவடைந்த தனபாலுக்கு மேலும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.

இந்தநிலையில் நேற்று 5 நாள் காவல் முடிவடைந்ததால் ரமேசை சோலூர்மட்டம் போலீசார் ஊட்டி மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். காவல்துறை தரப்பில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் ஆகியோர் ஆஜராகினர்.

 ரமேசை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி ஸ்ரீதரன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். தொடர்ந்து போலீசார் அவரை அழைத்துச் சென்றனர். இருவரையும் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிக முக்கிய பிரமுகர்

கனகராஜ் விபத்தில் இறப்பதற்கு முன்பு வரை நெருங்கிய உறவினரான ரமேஷ் உடன் இருந்தது, மிக முக்கிய பிரமுகரை தப்பிக்க வைக்க கோடநாடு கொலை, கொள்ளை திட்டத்திற்கு திட்டம் தீட்டியதை மறைக்க முயற்சித்தது, செல்போன் ஆதாரங்களை அழித்தது குறித்து கேள்விகளை எழுப்பி பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்