கோத்தகிரியில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கோத்தகிரியில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கோத்தகிரி
கோத்தகிரியில் பெய்த பலத்த மழையால் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டியில் பலத்த மழை
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி உள்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக அவலாஞ்சி, கோடநாடு, கிண்ணக்கொரை, குந்தா உள்ளிட்ட இடங்களில் அதிக மழை பதிவானது.
நேற்று ஊட்டி நகரில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. கடும் பனி மூட்டம் நிலவியதால் சில சாலைகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை இயக்கினர். கூடலூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வபோது சாரல் மழை தூறியது.
சாலையின் குறுக்கே மரம் விழுந்தது
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் லேசான மண்சரிவுகள் மற்றும் சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தது.
இந்த நிலையில் நேற்று பலத்த மழை பெய்தது. காலை 7 மணி அளவில் கோத்தகிரியில் இருந்து அளக்கரைக்கு செல்லும் சாலையின் குறுக்கே மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் கணேசன், உதவி செயற்பொறியாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை மின் வாளால் வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
இதேபோல கோத்தகிரியில் இருந்து கூடநாட்டிற்கு செல்லும் சாலையின் குறுக்கே காட்டு மரம் ஒன்று விழுந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றி, போக்குவரத்தை சீர் செய்தனர்.
மழையளவு
நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
ஊட்டி-20.2, கல்லட்டி-20, கிளன்மார்கன்-33, மசினகுடி-16, குந்தா-39, அவலாஞ்சி-66, எமரால்டு-30,
கெத்தை-42, கிண்ணக்கொரை-65, அப்பர்பவானி-35, பாலகொலா-40, குன்னூர்-37.5, பர்லியார்-16, கேத்தி-18, எடப்பள்ளி-37, கோத்தகிரி -28, கீழ் கோத்தகிரி-31, கோடநாடு-40, கூடலூர்-28, பாடாந்தொரை-23, பந்தலூர்-38 மழை பதிவாகி உள்ளது.