மூடிக்கிடந்த தனியார் கம்பெனி கழிவறையில் அழுகிய நிலையில் ஆண்-பெண் உடல்கள் மீட்பு; கொலையா? போலீஸ் விசாரணை

மூடிக்கிடந்த தனியார் கம்பெனி கழிவறையில் அழுகிய நிலையில் ஆண், பெண் உடல்களை மீ்ட்ட போலீசார், இருவரும் கொலை செய்யப்பட்டனரா? என விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-11-02 04:21 GMT
மூடிக்கிடக்கும் தனியார் கம்பெனி

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள திருமுடிவாக்கம், சிட்கோவில் ஏராளமான கம்பெனிகள் செயல்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு இங்கு செயல்பட்டு வந்த கம்பெனி ஒன்று தீ விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமானது. அதன்பிறகு அந்த கம்பெனி செயல்படாமல் மூடப்பட்டு உள்ளது. ஒரு காவலாளி மட்டும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று கம்பெனியின் ஒரு பகுதியில் பணி செய்வதற்காக ஆட்களுடன் கம்பெனி மேலாளர் அங்கு வந்தார். அப்போது கம்பெனியின் 3-வது மாடிக்கு சென்று பார்த்த போது அங்குள்ள கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.

ஆண்-பெண் உடல்கள்

கழிவறை கதவை திறந்து பார்த்தபோது, 22 வயது மதிக்கத்தக்க ஆண் ஒரு கழிவறையிலும், அருகில் உள்ள மற்றொரு கழிவறையில் பெண்ணும் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மேலாளர், குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக போரூர் உதவி கமிஷனர் பழனி, குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆண், பெண் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடல் அழுகிய நிலையில் கிடந்ததால் பிணமாக கிடந்தவர்கள் யார்? என்பதை அடையாளம் காண முடியவில்லை. அவர்கள் இறந்து 10 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களா? அல்லது வடமாநிலத்தை சேர்ந்தவர்களா? என்பதும் தெரியவில்லை.

கொலையா?

தீ விபத்துக்கு பிறகு இந்த கம்பெனி மூடி கிடப்பதால் இரவு நேரங்களில் மர்மநபர்கள் கம்பெனிக்குள் புகுந்து இரும்பு கம்பிகளை திருடிச்சென்று வருகிறார்கள். இறந்து கிடந்த ஆண், பெண் இருவரும் மூடிக்கிடக்கும் கம்பெனிக்குள் புகுந்து உல்லாசமாக இருக்கும்போது, இரும்பு கம்பிகளை திருட வந்தவர்கள், அந்த வாலிபரை கொலை செய்துவிட்டு, அந்த பெண்ணையும் கற்பழித்து கொலை செய்தார்களா? அல்லது இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா? என பல்வேறு கோணங்களில் குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அந்த கம்பெனி மற்றும் பக்கத்து கம்பெனிகளில் வேலை செய்யும் காவலாளிகளிடமும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்