பா.ம.க.வினர் சாலை மறியல்

பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-01 20:41 GMT
அரியலூர்:

வன்னியர் சமுதாயத்துக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றி வெளியிட்ட அரசாணையை மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை கண்டித்தும், ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கோரியும் அரியலூர் மாவட்டத்தில் போராட்டம் நடந்தது. இதில் பா.ம.க. மாநில துணை தலைவர் சின்னதுரை தலைமையில் அரியலூர் பஸ் நிலையம் முன்பாக திரண்ட கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்களை அரியலூர் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர்.
ஜெயங்கொண்டத்தில் மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி தலைமையில் காந்தி பூங்கா முன்பாக திரண்ட பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நான்கு ரோடு பகுதியில் மறியலில் ஈடுபட முயன்றபோது ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. இது தொடர்பாக 100 பேர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் திருமாவளவன் தலைமையில் காந்தி பூங்கா எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 50 பேர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்