மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு, பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்பு

மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு, பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர்.

Update: 2021-11-01 20:37 GMT
பெரம்பலூர்:

பள்ளிகள் திறப்பு
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் அந்த வகுப்புகளுக்கு நவம்பர் 1-ந்தேதி முதல் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகள் மற்றும் அந்த வகுப்புகளை கொண்ட உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், தனியார் பள்ளிகள் என பெரம்பலூர் மாவட்டத்தில் 72 ஆயிரத்து 430 மாணவ-மாணவிகளுக்கு 407 பள்ளிகளும், அரியலூர் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 861 மாணவ-மாணவிகளுக்கு 753 பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. முன்னதாக அந்த பள்ளிகள் அரசு அறிவித்திருந்த கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூய்மைபடுத்தப்பட்டிருந்தன.
உற்சாகத்துடன் வந்த மாணவ-மாணவிகள்
19 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாவட்டங்களில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் முககவசம் அணிந்து பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்குள் நுழைந்தவுடன் மாணவ-மாணவிகளுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியை ஆசிரியர்கள் வழங்கினர். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு பரிசோதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி இனிப்பு, பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் வகுப்பறைக்குள் சமூக இடைவெளியை கடைபிடித்து செல்வதற்காக வகுப்பறைக்கு முன்பு வரிசையாக வட்டம் போடப்பட்டிருந்தன. அதன்படி சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையாக மாணவ-மாணவிகள் வகுப்பறைக்குள் சென்றனர்.
புத்தாக்க பயிற்சி
ஒரு வகுப்பறையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக 20 மாணவ-மாணவிகள் இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு பள்ளியில் பின்பற்றப்பட வேண்டிய அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை விளக்கி கூறினர். நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை பாடங்கள் நடத்தாமல், அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையிலும், நம்பிக்கை ஊட்டும் வகையிலும் கதை, பாடல், விளையாட்டு, வண்ணம் தீட்டுதல், நினைவாற்றலை வளர்ப்பதற்கான விளையாட்டு உத்திகள் போன்ற புத்தாக்க பயிற்சியை ஆசிரியர்கள் கற்பித்தனர்.
மேலும் மாணவ-மாணவிகள் வகுப்பறையிலும் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வைக்கப்பட்டிருந்தது. பள்ளி வளாகங்களில் சோப்பு, கிருமி நாசினி மற்றும் தண்ணீர் வசதி செய்யப்பட்டிருந்தது. போதிய இடவசதி இல்லாத பள்ளிகளில் சுழற்சி முறையில் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். தீபாவளி பண்டிகை நெருங்குவதால் மாவட்டங்களில் சில பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைவாக இருந்தது. சில தனியார் பள்ளிகள் வருகிற 8-ந்தேதி தான் திறக்கப்படவுள்ளது.
குன்னம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஆர்வமுடன் வந்த 6, 7, 8 ஆகிய வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புகள், பேனா வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்லமுத்து, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பயிற்சி மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்