கிணற்றில் காயங்களுடன் விவசாயி பிணமாக மீட்பு

சமயபுரம் அருகே கிணற்றில் காயங்களுடன் விவசாயி பிணமாக கிடந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-11-01 20:07 GMT
சமயபுரம், நவ.2-
சமயபுரம் அருகே கிணற்றில் காயங்களுடன் விவசாயி பிணமாக கிடந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காயங்களுடன்...
சமயபுரத்தை அடுத்த சிறுகனூர் அருகே உள்ள கீழவங்காரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 50), விவசாயி. நேற்று இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் முகத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்கள்  50-க்கும் மேற்பட்டோர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருங்களுர் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணமூர்த்திக்கும், அதேபகுதியை சேர்ந்த வக்கீல் ஒருவருக்கும் இடபிரச்சினை இருந்து வருவதாகவும், இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்தியும், அவரது மனைவி  நீலாவதியும் தாக்கப்பட்டனர்.
மறியல் போராட்டம்
இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையில்தான் கிருஷ்ணமூர்த்தி கிணற்றில் இறந்து கிடந்துள்ளார். எனவே அவரை யாராவது அடித்து கொலை செய்து கிணற்றில் வீசி இருக்கலாம் என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்