‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-11-01 19:32 GMT
சேறும் சகதியுமான சாலை 
திருச்சியில் நேற்று பெய்த மழை காரணமாக கருமண்டபம் கூட்டுறவு காலனி பகுதியில் உள்ள சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
ராதா, கருமண்டம், திருச்சி.
பழுதடைந்த சாலை சீரமைக்கப்படுமா?
திருச்சி மாநகராட்சி 36-வது வார்டு பொன்மலையடிவாரம் ரேஷன் கடை அருகில் உள்ள சாலை மிகவும் சேதம் அடைந்து உள்ளது. இதனால் அந்த தெரு வழியாக லாரி மூலம் பொருட்கள் எடுத்து வருவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீலமேகம், திருச்சி
காவிரி குடிநீர் வழங்க கோரிக்கை
கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா பொய்யாமணி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு காவிரி குடிநீர் வழங்கப்படவில்லை. இக்கிராமம் வழியாக பெட்டவாய்தலை ‌, தோகைமலை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்தும் உப்பு தண்ணீரை குடிக்கும் அவல நிலையில் மக்கள் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதி மக்களுக்கு  காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில், கரூர்.
சாக்கடை வசதி ஏற்படுத்தப்படுமா?
திருச்சி மாவட்டம் உறையூர் தாலுகா வெக்காளியம்மன் நகரில் மழை பெய்யும் போது சாக்கடை வசதி இல்லாததால் மழை நீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதிகளில் நுழைகிறது. இதனால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் சாக்கடை வசதி ஏற்படுத்த வேண்டும்.
கண்மணி , திருச்சி.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சி மாவட்டம் மணப்பாறை காய்கறி மார்க்கெட்டுக்கு நாள்தோறும் ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்கிறார்கள். ஆனால் இங்கு போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. குறிப்பாக காய்கறி மார்க்கெட்டில் தேங்கும் கழிவுகள் சரிவர அகற்றப்படாததால் மலைபோல் குப்பைகள் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ்குமார், மணப்பாறை, திருச்சி.
தொற்றுநோய் பரவும் அபாயம்
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா கரட்டாம்பட்டி கிராமம் கவுண்டர் தெரு அருகில் காமன் கோவில் உள்ளது. இங்கு மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சக்திநாதன், கரட்டாம்பட்டி, திருச்சி.
கொசுமருந்து அடிக்க வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியில் சாக்கடை கலந்த நீரானது ஆங்காங்கே தேங்கி நிற்பதால்  இலுப்பூர் பகுதியில் அனைத்து ஏரியாவிலும் கொசுக்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் கொசுமருந்து தெளிக்க சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தோஷ் ஜெய் ஜான் பிரகாஷ், புதுக்கோட்டை.

மேலும் செய்திகள்