ஜமுனாமரத்தூரில் வாலிபர் மீது துப்பாக்கி சூடு
ஜமுனாமரத்தூரில் வாலிபரை துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அருகே உள்ள மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. அவரது மகன் கார்த்தி (வயது 20).
இவரும், மேல்விளாமூச்சி கிராமத்தை சேர்ந்த காசி என்பவரின் மனைவி சுகுணாவும் தங்களது ஆடுகளை மோட்டூர் காப்புக்காடு வனப்பகுதியில் மேய்த்து கொண்டிருந்தனர்.
அப்போது கார்த்தி மீது திடீரென துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஜமுனாமரத்தூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் விசாரணை நடத்தியதில், கார்த்தியை துப்பாக்கியால் சுட்டது சுகுணாவின் கணவர் காசி என்பது தெரியவந்தது.
மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், சுகுணாவுக்கும், கார்த்தியின் அண்ணன் சேட்டுக்கும் பழக்கம் இருந்ததால், சுகுணாவிடம் பேசுவதை நிறுத்துமாறு சேட்.டுவை எச்சரித்துள்ளார்.
இருப்பினும் சேட்டு தனது நடவடிக்கைகளை மாற்றி கொள்ளாததால் அவரை தீர்த்து கட்ட நினைத்து சுட்டதாகவும், கார்த்தியும், அவரது அண்ணன் சேட்டுவும் ஒரே மாதிரி இருப்பதால் ஆள் மாறிவிட்டதாகவும் காசி தெரிவித்து உள்ளார். இதனையடுத்து போலீசார் காசியை கைது செய்தனர்.